தெறி – விமர்சனம்

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே…

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தை வளர்ப்பினிலே…”

– ‘தெறி’ திரைப்படம் சொல்லும் நீதி இதுதான்.

கேரளாவில் ‘ஜோசப் குருவிலா’ என்ற பெயரில் வசித்து வருகிறார் விஜய். அங்கு அவர் ஒரு பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.

விஜய்யின் ஒரே மகள் நைனிகா. தாயில்லாப் பிள்ளையான அக்குழந்தையை ஒற்றை பெற்றோராக விஜய் பாசத்தைக் கொட்டி வளர்த்து வருகிறார். குற்றம் செய்தவர்களைக்கூட மன்னிப்பு கேட்கச் சொல்லி, அவர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னித்து, சண்டை – சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்பது இந்த ‘ஜோசப் குருவிலா’ என்ற விஜய்யின் லட்சியம். இதையே தன் செல்ல மகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்.

நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார் எமி ஜாக்சன். நைனிகாவை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போய் விடுவது, திரும்ப அழைத்து வருவது என்றிருக்கும் விஜய் மீது எமி ஜாக்சனுக்கு ஒருதலையாய் காதல் முளைத்து வளர்கிறது.

ஒருநாள். எமி ஜாக்சனுக்கும் ஒரு ரவுடிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் காண்டாகும் ரவுடி, பின்னர் நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்துகிறான். இதில் சிறு காயத்துடன் எமி ஜாக்சனும், காயமின்றி நைனிகாவும் தப்பிக்கிறார்கள்.

தங்களை கொல்ல முயன்ற ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். புகாரில் நைனிகாவின் பெயரும் இருப்பதால், விஜய் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏறபடுகிறது. அங்கு வரும் ஒரு போலீஸ் அதிகாரி விஜய்யை எங்கேயோ பார்த்ததுபோல் சந்தேகப்படுகிறார். அவர் விஜய்யை “விஜயகுமார்…” என்ற பழைய பெயரில் அழைக்க, விஜய் தன்னை மறந்து திரும்பிப் பார்த்துவிடுகிறார்.  அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்கும் எமி ஜாக்சனுக்கு சந்தேகப் பொறி தட்டுகிறது. ‘போலீஸ் அதிகாரி விஜயகுமார்’ என்ற பெயரை வைத்து அவர் இண்டர்நெட்டில் தேடிப் பார்க்கும்போது அவருக்கு பல உண்மைகள் தெரிய வருகின்றன…

பிளாஷ்பேக்கில், விஜய் ‘விஜயகுமார்’ என்ற பெயரில் சென்னையில் போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார். அவருக்கு கார் ஓட்டும் கான்ஸ்டபிளாக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார்.

அம்மா ராதிகா மீது பாசத்தைப் பொழியும் மகனாக இருக்கும் விஜய், அநியாயங்களை எல்லாம் தட்டிக்கேட்கும் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். அவருக்கும், பயிற்சி மருத்துவராக இருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி சமந்தாவுக்கும் இடையே முதல் சந்திப்பிலேயே மோதலும், காதலும் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த தன் மகள் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஏழை பெரியவர் ஒருவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கும் விஜய், அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் காட்டுக்குள் வீசப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவள், தன்னை கொத்திக் குதறிய காமக்கொடூரன் யார்? என்பதை விஜய்யிடம் மரண வாக்குமூலமாக சொல்லிவிட்டு பரிதாபமாக இறந்துபோகிறாள்.

குற்றவாளி மிகப் பெரிய அரசியல்வாதியான (இயக்குனர்) மகேந்திரனின் மகன் என்பது தெரிந்ததும், அவனை கைது செய்ய விஜய் நேரடியாக மகேந்திரன் வீட்டுக்குப் போகிறார். ஆனால், மகேந்திரனோ தன்னுடைய மகனை இரண்டு நாட்களாக காணவில்லை என்று பதில் புகார் கொடுக்கிறார். இது குறித்து ஒரு ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று யோசித்துக்கொண்டிருக்கும் விஜய்யிடம் மொட்டை ராஜேந்திரன், “இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம் சார். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காது. தப்பித்துவிடுவான்” என்று உலக நடப்பை எடுத்துக் கூறுகிறார். ஆனால், அந்த நிமிடத்தில் மொட்டை ராஜேந்திரனே அதிர்ச்சி அடையும் விதமாக ஒரு செயலை நிகழ்த்தி காட்டுகிறார் விஜய்.

அது என்ன? அந்த குற்றவாளி கிடைத்தானா? விஜய்க்கு அடுத்தடுத்து என்ன பிரச்சனைகள் ஏற்பட்டன்? அவர் ஏன் கேரளாவில் போலி பெயரில் வாழ்ந்து வருகிறார்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு திடுக்கிடும் திருப்பங்களுடன், சென்டிமெண்ட் கலந்து பதில் சொல்லுகிறது மீதிக்கதை.

விஜய் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து, அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே முதல் பாதி முழுவதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய் அறிமுகமாகும் காட்சியில் தொடங்கி, ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் ஸ்டைலைப் பார்த்து தியேட்டரில் ரசிகர்கள் போடும் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மாஸாக இருக்கிறது. போலீஸ் அதிகாரிக்கான கெத்து, ஸ்டைல் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது ஸ்டைலான நடனம் உண்மையிலேயே ரசிகர்களுக்கு செம விருந்து. மேலும், விஜய், சுவிங்கத்தை கையில் வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு உண்மையான மாஸ் விருந்து. படத்திற்கு படம் இளமையாக காட்சி தரும் விஜய் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகவே தெரிகிறார்.

இந்த படத்தில் குறிப்பிடும்படியான நபர் பேபி நைனிகா. அந்த குழந்தையிடம் இருந்து எந்தளவுக்கு நடிப்பை வாங்கமுடியுமோ அதை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. விஜய்க்கும் நைனிகாவுக்கும் இடையிலான பாசத்தை அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.

ஆசிரியையாக வரும் எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லீ.

சமந்தா, ‘கத்தி’ படத்தில் போல் அல்லாமல் நடிப்புக்கு நிறைய வாய்ப்பு கிடைத்து, அதில் ஸ்கோரும் செய்துள்ளார். அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குனர் மகேந்திரன் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனம் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது ரசிக்க வைக்கிறது. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார்.

மொட்டை ராஜேந்திரன் படம் முழுக்க விஜய் கூடவே வலம் வந்திருக்கிறார். விஜய்க்கு சமமாக இவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் அட்லீ.

ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் அட்லீ ஒரு விஜய் ரசிகர் போல இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரொம்பவும் ரசித்து எடுத்திருக்கிறார். இவர் விஜய்க்காக காத்திருந்து இந்த படத்தை இயக்கியது வீண் போகவில்லை.

அதேநேரத்தில், அட்லீக்கே உரித்தான ரொமான்ஸ், எமோஷன்ஸ் காட்சிகள் இந்த படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.

வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ்.

ஜி.வி.பிரகாஷூக்கு இது 50-வது படம். பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ள நிலையில், அவற்றை படமாக்கிய விதத்தால் பாடல்களை மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.

ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

‘தெறி’ – வெற்றிகரமாக தெறிக்கிறது!