டிவி விவாதத்தில் அநாகரிகம்: சீமானுக்கு ஆதரவும், எதிர்ப்பும்!

தந்தி தொலைக்காட்சியின் நேரலை விவாதத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் “ஏய்… லூசு” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அருணனைப் பார்த்து திட்ட, பதிலுக்கு அவர் ‘போடா… நீதான் லூசு” என்று திட்ட, நெறியாளர் ரங்கராஜ் பாண்டே இதை பார்த்து சந்தோஷமாய் சிரித்துக்கொண்டிருக்க, இதை பார்த்த கோடிக்கணக்கான தமிழர்கள் இது பற்றிய தங்கள் கருத்துக்களை காரசாரமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சில:

கோமதி நாயகம் வீரபத்ரன்:

இந்நிகழ்வில் ‘அதிமுகவை அகற்றுவதுதான் மாபெரும் கம்யூனிச லட்சியம்’ என்றார் சி.பி.எம். அருணன்.

அதற்கு சீமான், ‘இதெல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் லட்சியமா? எந்த கொள்கையும் இல்லாத விஜயகாந்த் பின்னே, எங்களுக்கு கம்யூனிசம் சொல்லிக் குடுத்த நீங்கள் நிற்கலாமா’ என்றார். கூடவே, ‘டிராஃபிக் ராமசாமியை விட குறைவான வாக்கு வாங்கிய சி.பி.எம். கட்சி பின்னால் நான் வர வேண்டுமா?’ என்றும் கேட்டார்.

சீமானின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாத சி.பி.எம். அருணன், தனது போலி கம்யூனிச வழக்கப்படி, நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாத விமர்சனங்களை சீமான் மீது வைத்தார்.

இதை பொறுக்க முடியாத சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என்றார்.

உடனே பொங்கி எழுந்த சி.பி.எம். அருணன், “நீ தான்டா லூசு” என்று ‘வாடா, போடா, அவன், இவன்’ என்று அநாகரீகத்தின் உச்சமாக கத்தினார்.

‘பெரியாரை விமர்சித்து எந்த மேடையிலாவது நான் பேசி இருந்தால் ஆதாரத்தை காட்டுங்க’ என்று சீமான் சொல்லியும், தொடர்ச்சியாக பேசிக்கொண்டே போன அருணனைப் பார்த்து அண்ணனின் கோபம் மிக சரியே.

’காந்தியை முன்னாள் பிரதமர் என்றும், பெரியாரை முன்னாள் முதல்வர் என்றும் ஒரு மாநாட்டில் பேசும் விஜயகாந்தைப் பார்த்து அருணன் போன்ற பேரறிஞர்கள் காத்து இருப்பது எனக்கு பெருத்த வேதனையாக இருக்கிறது’ – சீமான்.

இதற்கு அருணனிடம் பதில் இல்லை. மாறாக பெரியாரை வம்புக்கு இழுப்பது என்ன நியாயம்? ட்ராபிக் இராமசாமியை விட குறைவான ஓட்டு தானே வாங்கினார்கள்? அதற்கான காரண காரியங்களை விளக்க முடியாமல் பேசிக்கொண்டே இருந்தால் கோபம் வருவதில் என்ன தவறு?

போலி அரசியல் வியாதிகளால் மட்டுமே எந்த சூழலிலும் நடிக்க முடியும்? ஏனெனில் காலம்காலமாய் மக்களிடம் நடித்து பழக்கப்பட்டவர்கள்….

                                                      # # #

 சிபிசந்தர் தனராஜ்:

கீழ்த்தரமாக அநாகரீகமாக மனநோய் பீடித்தவர்களாக அரசியலின் புற்றுநோய்களாக முளைத்திருக்கிற ஹெச் ராஜா போன்றவர்களின் வழியில் பயணிக்கும் சீமான் ..

பொதுமேடைகள், விவாத அரங்குகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்றவைகளில் ஆக்கபூர்வமாகவும் நாகரீகமாகவும் நடந்து மக்களின் ஆதரவை பெறுவது என்பது ஒரு ரகம் …

பொறுக்கிகள், ரெளடிகள், பைத்தியக்காரர்கள், அரைவேக்காடுகள் போன்றவர்களின் ஆதரவை மட்டுமே பெறுவதற்காகவும், அவர்களை ஊக்குவித்து சுயலாபம் அடையும் நோக்கில் இழிவாக நடந்துகொள்வது என்பது அரசியலின் இன்னொரு ரகம்

இரண்டாவது பாதையை பயன்படுத்தும் கேவலமான அரசியல் வியாதிகள் தான் ஹெச் ராஜாவும், சீமானும்.

பல்வேறு தருணங்களில் ஹெச் ராஜா இதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்வில் ஹெச் ராஜாவின் அடிப்பொடி என்பதை சீமான் உறுதி செய்துவிட்டார்….

அண்டபுளுகுகள், ஆகாச புளுகுகள், தனிநபர் விமர்சனம், மரியாதைக் குறைவு, வரலாற்றை திரித்துப் பேசுதல், பேசியவற்றை பேசவே இல்லை என ஜகா வாங்குதல், ஒழுக்கமற்ற வார்த்தை பிரயோகம், இழிவான நடவடிக்கைகள் போன்றவற்றில் ஹெச் ராஜாவின் நடவடிக்கையும், சீமானின் நடவடிக்கையும் வேறுவேறா? ஒன்றே தானே …..

‘உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவிகள் பருந்தாக முடியாது, காகிதப்பூக்கள் மணக்காது’ என்கிற சீமானின் மாமனார் அய்யா காளிமுத்துவின் வரிகளிலேயே சீமானுக்கான விடை இருக்கிறது ….

கருத்து இருக்கிறவனிடம் நிதானமும் பொறுமையும் இருக்கும். கள்ளத்தனம் இருக்கிறவனிடம் அதை எதிர்பார்க்க முடியாது. சீமானிடம் எது இருக்கிறது என்பதை ஆயுத எழுத்து வெளிச்சமிட்டிருக்கிறது ….

தூய்மையானவர்களின் கைகளில் அரசியலும் அதிகாரமும் இருந்தால் எல்லாமும் தூய்மையாகவும் ஒழுக்கமானதாகவும் இருக்கும் …

சீமான் போன்ற ஒழுக்கக் கேடானவர்களை துளியளவு அனுமதித்தாலும் எல்லாம் பாழாகும் என்பதை தமிழினம் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும்

                                                             # # #

 அன்பு அன்பழகன்:

பேராசிரியர் அருணன், சீமானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!. மக்கள்நல கூட்டணி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!

சீமானை இனவெறியன் என்று சொல்ல பேராசிரியர் அருணன் யார்? ஈழத்தைப் பொருத்தவரை இந்த இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன? தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பற்றிய இவர்களின் நிலைப்பாடு என்ன? ஈழத்திற்கு எதிராக வெளிப்படையாகவே செயல்படும் இவர்கள் தமிழ்நாட்டில் ஒரு தமிழனைப் பார்த்து இனவெறியன் என்று சொல்வது கண்டிக்கத்தக்கதே!

ஈழத்தை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்த வைகோ போன்ற ஒரு தலைவர் இன்று கேவலம் இந்த அரசியல் செல்லா காசுகளுக்காக ஈழத்தை விட்டுக்கொடுத்து அவர்களுடன் கூட்டணி சமரசம் செய்ததற்காக வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும்.

நேற்று வரை தி.மு.க.வில் இருந்து சுகங்களை அனுபவித்து விட்டு, ராஜபக்சவுடன் கை குலுக்கி பரிசு பெற்றுவிட்டு,  இன்று திடீர் என்று கலைஞருக்கு எதிராக கேவலம் அரசியலுக்காக தனது கொள்கைகளை விட்டுக்கொடுத்த திருமாவளவன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விஜயகாந்த் போன்ற ஒரு கொள்கையற்ற தலைவனின் வாசலில் கூட்டணிக்காக பிச்சை எடுக்கும் இந்த மக்கள்நல கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற அரசியல் ஆசான்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு மோடியை அழைத்து வந்து மோடி வித்தை காட்டியது அண்ணன் வைகோ தான். அப்போது மோடியை விமர்சித்த அருணன் போன்றார்,  இன்று வைகோவுடன் கூட்டு போட காரணம் என்ன?
கேவலம் பதவி ஆசை தானே?

இப்படி ஊரை ஏமாற்றும் மக்கள்நல கூட்டணியும் அருணன் போன்றோரும் தான் சீமானிடமும், தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்…

இங்கே எவனிடமும் தமிழன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழர்களிடம் தான் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

                                                        # # #

தியாகராஜன் குணாளன்:

\\போன வைடா ங்கோத்தா
ஏய் சும்மா லூசு மாதிரி பேசாதய்யா – இது தலைவன்..

\\இழிசாதி தலித்தே – இது அவன் கட்சி வேட்பாளர்..

குட் காம்பினேஷன்..

                                                      # # #

மனோ மாசானமுத்து:

செவ்விந்தியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழர்களின் போராட்டத்தை இனவெறி என்பது..

பாலஸ்தீன போராட்டத்தை ஆதரிப்பது..
தமிழின போராட்டத்தை எள்ளி நகையாடுவது..

ஜெய்தாப்பூர் அணு உலையை எதிர்ப்பது..
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பது..

கேரளாவில் யானைகளை வைத்து திருவிழா நடத்துவதை கமுக்கமாக கடந்துபோவது..
தமிழர்களின் ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்பது…

சிரியாவில், ஈராக்கில் கொல்லப்படும் குழந்தைகளுக்காக கதறுவது..
தமிழ் பிள்ளைகள் கொல்லப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பது..

பார்ப்பனர்களை வந்தேறிகள் எனக் கூறி திராவிட இன அரசியல் செய்தால் அது முற்போக்கு..
தமிழர்கள் தங்களை தமிழர் என்று சொல்லிவிட்டால் அது பிற்போக்கு..

இப்படியாக தமிழ் நாட்டில் முற்போக்கு வியாபாரிகள் பிஸியாக இருக்கிறார்கள்.

                                                 # # #

குமரேசன்:

“கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக்கிட்டிருக்காங்க. அவங்க முன்னாடி சொல்றேன்… மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகள் பெற்று நாங்கள் முன்னால நிற்கலைன்னா என்னோட கட்சியைக் கலைச்சிட்டு, கம்யூனிஸ்ட்ல சேர்ந்துர்றேன்… அதுவும் சிபிஎம் கட்சியிலேயே சேர்ந்துர்றேன்.”

சொன்னபடி நடந்துகொள்ளும் நேர்மையாளர்தான் என்றால் இந்தக் கூற்றின் முதல் பகுதி நடக்கும். இரண்டாவது பகுதி நடக்காது. கம்யூனிஸ்ட் கட்சியில், அதுவும் சிபிஎம்-மில் “ஆகா வாங்க” எனறு உடனே சேர்த்துக்கொள்வார்களா என்ன?

அரசியல் நிலைபாடுகளில் கடும் மாறுபாடுகள் கொண்டவர்கள் கூட பேராசிரியர் அருணன் ஆழ்ந்த ஆய்வுப் புலமையோடு ஆதாரப்பூர்வமாக வைக்கிற கருத்துகளை மதிக்கிறார்கள். அருணனின் வாதங்களை மறுக்கிறவர்களும் அவரது இயக்க ஈடுபாட்டையும் சமூக அக்கறையையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதில்லை.

அப்படிப்பட்டவரை ஆத்திரமூட்டும் வகையில் “யே” என்று சொல்லத் தொடங்கி, “லூசு மாதிரி பேசுற நீ” என்கிற வரையில் தரமாகப் பேசினார் முன்னாள் திரைப்பட இயக்குநர் சீமான்.

படப்பிடிப்புத் தளங்களில் சில இயக்குநர்கள் உதவியாளர்களையும் துணை நடிகர்களையும் தாழ்வுபடுத்திப் பேசுவதுண்டு. அதுபோல் நினைத்துக்கொண்டார் போலும் ‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர்.

இதையும் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இப்படிப் பேசியது அரசியல் அருவருப்பு என்றால், தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் யாரையும் ஒரு வாக்கியம்கூட முழுசாகச் சொல்லவிடுவதில்லை என்பதில் புகழ்பெற்ற ஒருங்கிணைப்பாளர் குறுக்கிடாமல் இருந்ததை என்னவென்பது? நிகழ்ச்சியின் மரியாதைக்காவது “இப்படிப்பட்ட சொற்களைப் பேசாதீர்கள்” என்று சொல்ல முன்வரவில்லையே? நேரடி விவாதத்தில் பங்கேற்காமல் தொலைவிலிருந்து பேசுகிறார் என்று சொல்லி வாய்க்கு வந்தபடி பேசவிட்டதில், பேராசிரியர் தானே எதிர்வினையாற்றுகிற நிலையை ஏற்படுத்தியதில் ஊடக நெறி இருக்கிறதா? சொல்லுங்கள், அனுபவம் மிக்க ஊடகவியலாளரான பாண்டே அவர்களே?

                                  # # #

ரபீக் ராஜா:

முன்னதாக, சீமான், பாண்டேவுக்குக் கடும்கண்டனம்.

“சினிமாக்காரனை நம்பி அரசியல் இருக்கிறது என்று பிரச்சாரப் பாடல் பாடிய சிபிஎம், விஜயகாந்துக்காக காத்திருப்பது ஏன்?” என்று சரியாகவே விவாதத்தைத் தொடங்கினார் சீமான். அதற்கு அருணனிடம் மட்டுமல்ல, சிபிஎம்மிடம் மட்டுமல்ல, மநகூட்டணியிடமே பதில் இருக்கமுடியாது.

எவ்வளவு, தீவிர விவாதத்தின் நடுவிலும் அருணன், தமிழன் பிரசன்னா ஆகியோர், சிரித்துக்கொண்டே விவாதிப்பார்கள். அதுதான் அவர்களது விவாதமுறைமை.

இன்று சிரித்துப்பேசாத அருணன், சீமானை இனவாதி என்று நேரடியாகக் குற்றம்சாட்டிவிட்டு, கூட்டணிக்கு ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். அப்படியானால், சீமான் வந்திருந்தால் சேர்த்திருப்பீர்களா?
இனவாதிக்கு மநகூட்டணியில் இடமிருக்கிறதா?

திமுக, அதிமுகவை எதிர்க்க, எங்களுடன் வராமல், 234 தொகுதியிலும் தனியாக ஏன் நிற்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி, சீமானை, ஜெயலலிதா ஆதரவாளராக நேர்நிறுத்திய அருணன், சீமானிடம், “மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்” என்கிறார். இங்கே எங்கே வருகிறது மனசாட்சி?

சீமான் 234 தொகுதிகளிலும் நிற்பதற்கு, ஓட்டரசியல் சனநாயகம் இடமளிக்கவில்லையா? பாஜக.வும் தான் திமுக, அதிமுகவை எதிர்த்துக் களம் கண்டது. இப்போதும் அப்படி ஒரு சூழல்வரின் கூட்டணிக்காக அவர்களையும் அழைப்பீர்களா?

“சுயநிர்ணயத்தை ஏற்காத நீங்கள் ஒரு கம்யுனிஸ்ட்டா? உங்கள் தத்துவம் என்ன?” என்று சீமான் கேட்பதற்கு, அருணனிடம் என்ன பதில் இருக்கிறது?

“என் பின்னால் நீங்கள் ஏன் வரக்கூடாது?” என்று சீமான் ஏன் கேட்கக் கூடாது? சுயேச்சை ஒருவர் முதல்வர் ஆகும் சனநாயக நாட்டில் ஒருவர் இப்படியும் கோருவதற்கு இடமில்லையா?

விவாதம், விஜயகாந்தைத் தொங்கிக்கொண்டிருப்பது பற்றி. இது குறித்து கேள்வி எழுப்புவது தான் விவாதமே. அருணன் இறுதிவரை பதில் சொல்லவில்லையே!

சீமான், அவர் வார்த்தைகளுக்குப் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். அருணன், வயதில் மூத்த,  அறிவாளி, பேராசிரியர் என்பதற்காக இல்லை. சீமானின் வார்த்தைகள் தவறானவை. அருணன் பதிலுக்கு உதிர்த்த வார்த்தைகளும் தடித்தவை தான்.

பாண்டே ஒரு நெறியாளரே இல்லை என்பது மட்டுமல்ல, அவர் ஊடக தர்மம் என்றால் என்னவென்றே தெரியாதவர். உடல்மொழியில் வெளிப்படும் மேட்டிமைத்தனம், எகத்தாளம்… இன்றும் வெளிப்பட்டது கயமை.

தொலைக்காட்சி நிலையத்துக்கு ஒரு நபர் வர முடியவில்லை என்றால், அக்கட்சி சார்பில் பேச வேறு எவரும் இல்லையா…? வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏன் அநாவசியமாய்ப் பங்கேற்கச் செய்ய வேண்டும்? (தவிர்க்க முடியாத நிகழ்வுகள் விதிவிலக்கு)

அவ்வாறு பங்கேற்பவரை, நெறியாளர் ஒழுங்குபடுத்திட முடியுமா?

அருணன் இன்று பேசியவை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்து தான். எப்போதும் உணர்ச்சிவசப்படும் சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, இது வழியன்று.

சீமானின் இந்த முரண்பட்ட, பிற்போக்கு அரசியல் பயணமே, தமிழக அரசியல் வெற்றிடத்தை, இடதுசிந்தனை நிரப்பாததால் தான் நிகழ்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

                                      # # #

முரளி ஆப்ஸ்:

அமரர் எம்ஜிஆர் அவர்கள் சிறந்த மனிதாபிமானி எனறாலும் அதே அளவிற்கு அவர் முன்கோபியும் கூட. கோபம் வந்தால் பட்டென்று அடித்து விடுவாராம்.

இதை நன்கு அறிந்தவர் கலைஞர். எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றி முதல்வராகியதும்,  அவரது முன்கோபத்தை பயன்படுத்தியே அவரை வீழ்த்த திமுகவால் திட்டமிடப்பட்டது. சட்டசபைக் கூட்டங்களில் அவரை வெறுப்பேற்றும் விதமாக பேசினால் அவர் கோபத்தில் சூழ்நிலை மறந்து எழுந்து அடித்து விடுவார்; அதை வைத்து அசிங்கப்படுத்தலாமென்பது அவர்கள் திட்டம்.  அந்தப் பணியை செய்யும் பொறுப்பு துரைமுருகன், சுப்பு, ரகுமான்கான் மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் பல மாதிரி பேசி அவரை சீண்டிப் பார்த்தனர்.

அவர்கள் திட்டத்தை புரிந்து வைத்திருந்த எம்ஜிஆர் அவர்கள், கோபப்படுத்த முனையும் போதெல்லாம் எழுந்து, ‘நீங்கள் என்னை கோபப்படுத்த விரும்புகிறீர்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள் நீங்கள் என்ன பேசினாலும் நான் கோபப்பட மாட்டேன்’ என்று சொல்லி சிரிப்பார்.

இப்படி பேசிப் பேசி ஆவேசமாகி, ஒரு தடவை துரைமுருகன் மயங்கி விழ, எம்ஜிஆர் அவரை தன் மடியில் தூக்கி வைத்து தண்ணீர் தெளித்த காமெடியெல்லாம் அப்போது நடந்தது.

புலனடக்கம், நாவடக்கம் இவையெல்லாம் தவம் செய்ய மட்டுமல்ல, பொது வாழ்க்கையிலும் அவசியம் சீமான்.