தமிழகத் தேர்தல் யாருக்கு முக்கியமானது?

பாஜகவிற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால் நில அபகரிப்புச் சட்டம், தண்ணீர் தனியார்மயம், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு, ராணுவ ஆயுததளவாடங்களின் அந்நிய முதலீடு போன்ற சட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இது தவிர மாநில அதிகாரங்களைப் பறிக்கும் பலவேறு மசோதாக்களும் நிறைவேற்றப்படமுடியவில்லை.

பாஜக பீகார் தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்றிருந்தால் ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு வழி கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

நில அபகரிப்பு மசோதா நிறைவேறினால், பெருமளவு விவசாய நிலங்களை பெரும் நிறுவனங்களுக்கு தாரைவார்க்க முடியும். அதை சாமானிய மக்களால் தடுக்க முடியாது என்று அம்மசோதா சொல்கிறது. இம்மசோதா நிறைவேறினால் பெருமளவு அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்குள் வரும். இதை வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தினை வளர்ச்சி நிலைக்கு கொண்டு வரலாம் என கார்ப்பரேட் மோடி அரசு திட்டமிடுகிறது. ஆகவே நில அபகரிப்பு மசோதாவை நிறைவேற்ற ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெருவதே பாஜகவின் உடனடி திட்டம். இது தவறும்பட்சத்தில் மோடி பிம்பமும், திட்டமும் தோற்றுப் போகும். இம்மசோதாவிற்காகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் காத்திருக்கின்றன.

இம்மசோதா நிறைவேறினால், உதாரணத்திற்கு,

  1. தமிழகத்தில் கெயில் திட்டத்தினை மக்கள் அனுமதியில்லாமல் நிறைவேற்ற நில அபகரிப்பு செய்ய இயலும்,

      2.மீத்தேன் எரிகாற்று திட்டத்திற்கு விவசாயிகள் அனுமதியில்லாமல் நிலம் கையகப்படுத்த இயலும்.

  1. அதிக அணு உலைகளை நிறுவ நிலம் எடுக்க இயலும்.

     4.நியூட்ரினோ போன்ற திட்டங்கள் நிறைவேற்றுவது எளிது

ஆக, இம்மசோதாவை நிறைவேற்ற ராஜ்யசபாவில் தனக்கு ஆதரவளிக்கும் கூட்டணியை உருவாக்க மேற்குலகம் முயலுகிறது. அதாவது பாஜகவிற்கு தோதான கூட்டணி கிடைக்கவேண்டும்.

இது சாத்தியப்பட வேண்டுமென்றால் வெற்றி பெரும் கட்சிகள் பாஜகவோடு கூட்டணி வைக்கவேண்டும். அல்லது புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழகத்தில் அதிமுகவோ அல்லது திமுகவோ ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவோடு கூட்டணிக்குச் செல்லும். மத்திய அரசோடு புரிந்துணர்வில் இருந்தால் தான் மாநிலத்திற்கு நன்மை என்று சொல்லிக்கொண்டே இம்மசோதாக்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

ஏற்கனவே, நில அபகரிப்பு மசோதாவிற்கு அதிமுக மறைமுக ஆதரவையும், நேரடி ஆதரவையும் வழங்கியது. இந்துத்துவ வெறியாட்டம் நடந்துகொண்டிருந்த போதிலும் இதுநாள் வரை பாஜகவை கருணாநிதியோ, ஸ்டாலினோ விமர்சனத்திற்குள்ளாக்க காரணம் கிடைக்கவில்லை என்பதுபோல நடந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் தேமுதிக போன்ற ’கொள்கையற்ற கொள்ளையடிக்கும்’ கட்சியை யாரோடு சேர்த்து நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக முதல் அமெரிக்கா வரை முயன்று கொண்டிருக்கின்றன என்பது தான் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

ஆகவே நண்பர்களே, தேர்தலுக்குப் பின்னர் பாஜகவோடு அதிமுகவும் கூட்டு வைக்கும், திமுகவும் கூட்டு வைக்கும். அதன் பின்னர் இவர்கள் மக்களுக்கு வேட்டு வைப்பார்கள்.

இக்கூட்டணிக்கு விஜயகாந்தை கொண்டு செல்ல மேற்குலகம் முதல் அனைவரும் முயலுகிறார்கள். ஒரு வியாபாரியிடம் எப்படிப் பேசவேண்டுமென்பது அமெரிக்கர்களுக்கு மிக நன்றாக தெரியும். யார் பேரம் வெற்றி பெற்றாலும் நாம் தோற்போம்.

மீத்தேன், கெயில், நியூட்ரினோ, கூடன்குளம் ஆகியவற்றில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவற்றின் நிலைப்பாடுகள் நாம் அறியாததல்ல.

திமுக -திட்டங்களை கொண்டுவந்தது, ஒப்புதல் கொடுத்தது.

அதிமுக – இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றது.

தேமுதிக- சட்டமன்றத்திலோ, வெளியிலோ மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதும் இல்லை.

இம்மூன்று கட்சிகளும் நில அபகரிப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்பதும், இவர்கள் எப்படி கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்பதுவுமே இந்திய விவசாயிகளில் தலைவிதியை முடிவு செய்யும்.

– திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்