டி.ஆர். சர்ச்சை விவகாரம்: செய்தியாளர் களை சந்திக்க மறுக்கும் தன்ஷிகா!

‘சோலோ’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தன்ஷிகா, இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. டி.ராஜேந்தர் சர்ச்சை விவகாரம் காரணமாகவே தன்ஷிகா செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்திருக்கிறார் என்பதை பூடகமாக தெரிவித்தார் நகைச்சுவை நடிகர் சதீஷ்.

சினிமா தயாரிப்பு தொழிலில் கால் பதித்திருக்கும் ‘ரெஃபெக்ஸ் குரூப்’ அனில் ஜெயின், தனது ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலம், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ‘சோலோ’.

துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார்.

3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது இப்படத்தின் டீசர்கள் திரையிடப்பட்டன.

s9

இந்நிகழ்ச்சியில் நாயகன் துல்கர் சல்மான் கலந்துகொண்டு பேசுகையில், “இதுவரைக்கும் நீங்கள் பார்த்தது வெறும் டீசர் தான். படம் இன்னும் உங்களை ஆச்சர்யப்படுத்தும். உலகத்தின் பல பகுதிகளில் ஒரே நாளில் வெளியாகும் என் முதல் படம் இது. ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் படத்தை எடுத்தது சாதாரண விஷயம் கிடையாது. ஒரே காட்சியை திரும்பத் திரும்ப இரு மொழிகளிலும் எடுத்தது சவாலாக இருந்தது. தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல இண்டஸ்ட்ரி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சதீஷுடன் நடிக்கும்போது அவர் செய்யும் காமெடிகளில் சிரிக்காமல் இருப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. இயக்குனர் பிஜாய் நம்பியார் என்னை தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். படத்தை பற்றி கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நாங்கள் நிறைய விவாதிப்போம்” என்றார்.

நகைச்சுவை நடிகர் சதீஷ் பேசுகையில், “மேடையில் இருக்கும் எல்லோருடைய பெயரையும் சரியாக சொல்லி விட்டேன் என நினைக்கிறேன், அதனால் எந்த பிரச்சினையும் இல்லை” என டி.ராஜேந்தர் – தன்ஷிகா சர்ச்சையை மறைமுகமாக சுட்டிக்காட்டி பொடி வைத்துப் பேசினார். “இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான தன்ஷிகா இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்திருக்க வேண்டும். அவரை நீங்க (செய்தியாளர்கள்) எங்கே வர விடுறீங்க…?” என்றும் நொந்துகொண்டார் சதீஷ்.

(டி.ஆர். – தன்ஷிகா சர்ச்சை விவகாரத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது டி.ஆர். தான். எனவே, செய்தியாளர்களை சந்திக்க டி.ஆர். தான் சங்கடப்பட வேண்டுமே தவிர தன்ஷிகா அல்ல என்பது தான் பெரும்பாலான செய்தியாளர்களின் நிலைப்பாடு. ஆகவே, தன்ஷிகா… வரலாம் வா… வரலாம் வா…!)

தொடர்ந்து பேசிய சதீஷ், “துல்கர் நல்ல நடிகர் என்பது தெரியும், ஆனால் இந்த படத்தில் நான்கு விதவிதமான கெட்டப்புகளில் மிகவும்  வித்தியாசப்படுத்தி நடித்திருக்கிறார். பிஜாய் திறமையான இயக்குனர், சிறப்பாக படத்தை எடுத்திருக்கிறார். இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது, முழுக்க முழுக்க  தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய்” என அழுத்தி சொன்னார்.

இயக்குனர் பிஜாய் நம்பியார் பேசுகையில், “நீண்ட நாட்கள் கழித்து இரு மொழிகளில் தயாரான இந்த ‘சோலோ’ என்ற  பைலிங்குவல் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘புதிய முகம்’ படத்தைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கிறேன். அந்த படத்தை இயக்கிய சுரேஷ் சந்திர மேனன் இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை. சாய் தம்கங்கர் மராத்தி சினிமாவில் பெரிய நடிகை. அவரை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததே பெரிய விஷயம். நான்கு நாயகிகள் உட்பட பல மொழி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘சோலோ’ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம். கதை சொல்லலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் ஒரு முயற்சி. தமிழ், மலையாளம் ரசிகர்கள் சிறந்த, புது முயற்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை பற்றிய உங்களின் எல்லா விமர்சனங்களையும்,  பாராட்டுகளையும் வரவேற்கிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அனில் ஜெயின், நடிகர்கள் சுரேஷ் சந்திர மேனன், அன்சன் பால், நடிகைகள் ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன், நேஹா ஷர்மா, சாய் தம்கங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Read previous post:
0a1d
பாபர் மசூதியை இடித்த பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு – தாஜ்மகால்?

“ராமர் பிறந்த இடம்” என பொய் பிரச்சாரம் செய்து, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய பார்ப்பனிய கடப்பாரைகளின் அடுத்த இலக்கு, அதே

Close