மண்ணும் மனசும் பின்னிப்பிணைந்த கதை எம்.சசிகுமாரின் ‘கிடாரி’!

‘வெற்றிவேல்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிடாரி’. முறுக்கு மீசையும், பிடரி முடியுமாக மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் எம்.சசிகுமார்,, தனது ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ சார்பில் இதை தயாரித்துள்ளார்.

‘வெற்றிவேல்’ திரைப்படத்தில் எம்.சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த நிகிலா விமல், இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். கிராமியப் பின்னணியுடன் மண்ணும், மனசும் பின்னிப்பிணைந்த இந்த படத்தின் கதை பிடித்துப்போனதால் நடிக்க ஒப்புக்கொண்ட அவர், இதற்காக அமெரிக்காவிலிருந்து வந்து நடித்து முடித்து, ‘டப்பிங்’கும் பேசிவிட்டு திரும்பிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இதர முக்கிய கதாபாத்திரங்களில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, நாடக கலை மு.ராமசாமி, சுஜா வருணீ மற்றும் பலரும், புதுமுகங்கள் சிலரும் நடித்துள்ளார்கள். இவர்களில், கொம்பையாத் தேவன் என்ற கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி, கோவணத்துடன் கோபம் ஏந்தி வீதி நடை போடும் காட்சி இப்போதே பேசப்படுகிறது.

0a1c

இயக்குனர் வசந்தபாலனிடம் உதவியாளராக பணியாற்றிய பிரசாத் முருகேசன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கடினமான மலைப்பகுதிகளிலும், அடர்ந்த முட்காடுகளிலும் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘ராஜதந்திரம்’, ‘மோ’ ஆகிய படங்களில் காமெடி வேடத்தில் நடித்த தர்புகா சிவா, ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட்டாகி, ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால், தணிக்கைக் குழு இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் உலகெங்கும் வருகிற (செப்டம்பர்) 2ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.