ஷங்கர் இயக்கும் புதிய படத்துக்கு வசனம் எழுதுகிறார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை நாயகனாக வைத்து தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மும்மொழிகளில் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, படபூஜையுடன் துவங்கியது.

இந்நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர்சிங், இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராம்சரணுக்கு ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தமன் இசையமைக்கிறார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார்.

ஷங்கரின் ‘முதல்வன்’ படம் போல அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நாயகன் ராம்சரண் இளம் அரசியல் தலைவராக நடிக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு, பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து வசனம் எழுதுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்.