கலைப்புலி எஸ்.தாணுவின் ‘ஆளவந்தான்’ 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’ஆளவந்தான்’ திரைப்படம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (08-12-2023) சுமார் ஆயிரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. அவருடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சங்கர் எஹெசான் லாய் இசையமைத்திருந்தார்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில், கமல்ஹாசன் பல்வேறு தோற்றங்களில் மிரட்டியிருந்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் வெளியாகி தற்போது 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையி,ல் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை (டிசம்பர் 8-ம் தேதி) ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகிறது.