”செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்”: தமிழ்நாடு அரசு ஆணை

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்து இருந்தார்.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வகித்து வந்த மின்சாரத் துறையை தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்க இருக்கிறோம் என முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஆளுநர், முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் தவறாக வழிநடத்துவதாகவும், தவறானது எனவும் கூறி பதில் கடிதம் அனுப்பினார். மேலும், முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரம் தொடர்பாக மீண்டும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்படி, துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முதல்வரின் பரிந்துரையின்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில்பாலாஜி, அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் பிரித்து வழங்கி இன்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத (Minister without portfolio) அமைச்சராகத் தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.