உடுமலையில் காதல் தம்பதியரை வெட்டிச் சாய்த்த சாதிவெறியர்கள் இவர்கள்தான்!

உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளி வேலுச்சாமியின் மகன் சங்கர்(22). பொறியியல் மாணவரான இவர், 8 மாதங்களுக்கு முன் தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யா(19) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்துள்ளது.

அவ்வப்போது பேச்சுவார்த்தை மற்றும் மிரட்டல் மூலம் பெண்ணை திரும்ப அழைத்துச் செல்ல பெண்வீட்டார் முயன்றனராம். இது பலனளிக்காமல் போன நிலையில், நேற்று முன்தினம் சங்கரும் கவுசல்யாவும் கடைக்குச் சென்று திரும்பும்போது, ஒரு கும்பல், மத்திய பேருந்து நிலையம் முன்பாக இருவரையும் சரமாரியாக வெட்டியது. அதில், சங்கர் துடிதுடித்து உயிரிழந்தார். கவுசல்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளம் பதறச்செய்யும் அந்த கொலைபாதகச் செயலை செய்த சாதிவெறியர்கள்தான் மேலே உள்ள படத்தில் இருக்கிறார்கள். போலீசிடம் சிக்கியிருக்கும் இவர்களில் ஒருவன் காவி வேட்டி உடுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.

கொலை நடந்த பகுதியில் தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலை வெறிச்சம்பவம் பதிவாகி உள்ளது. தம்பதியர் இருவரும் தரையில் சுருண்டு விழும்வரை அப்பகுதியில் காத்திருந்த கார், அதன்பிறகே நகர்ந்து செல்கிறது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘சந்தேகத்துக்கிடமான கார் குறித்தும், அதில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், கணவன், மனைவி இருவரையும் பின்தொடர்ந்து வந்தவர்களில் ஒருவர் சம்பவம் நடப்பதை செல்போன் மூலம் யாருக்கோ தகவல் தெரிவித்துவிட்டு நைசாக தப்பிவிடுகிறார். கொலை தொடர்பாக இதுவரை சுமார் 50 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது’ என்றனர்.

பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 5 பேர் வெட்டியதாகவும், அவர்களை பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சங்கர் படுகொலை தொடர்பாக, கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி (45) திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ரஜனாபர்வீன் முன்னிலையில் நேற்று சரணடைந்தார். இவரை மார்ச் 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னச்சாமியை போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.