அறிவியலை பொருத்தவரை காதல் என்ற ஒன்று கிடையாது!

காதலா, காமமா என்ற கேள்விகள் உலா வருகின்றன. காதல்தான் முக்கியம் என்றும், காமம்தான் முக்கியம் என்றும் பிரிந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

காதல் இல்லாமல் காமம் வரலாம். காமம் இல்லாமல் காதல் மட்டும் வருமா? சாத்தியம்தான். சொல்லப்போனால் இரண்டும் இல்லாமல் வேறு ஏதாவது கூட வரும் வாய்ப்புகள் உள்ளன. அறிவியலைப் பொருத்தவரை காதல் என்ற ஒன்று கிடையாது. மானுடர்களுக்குள் வரும் உணர்வை அது மூன்று வகையாக பிரிக்கிறது:

* ஈர்ப்பு

* உறவு / நட்பு

* காமம்

அதாவது இரண்டு பேருக்கு இடையே ஒரு ஈர்ப்பு, அதாவது க்ரஷ் ஏதாவது இருந்தால் அதனை ஈர்ப்பு என்று சொல்லலாம். இந்த இருவரும் காமம் கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ, ஏன் நேரில் கூட பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண் என்று நடக்கலாம். சொல்லப்போனால் இரண்டு தரப்பிலும் கூட இருக்க வேண்டியதில்லை. எனக்கு தீபிகா மேல் இருப்பது இப்படிப்பட்ட ஒரு உணர்வுதான்.

உறவுக்கு அல்லது நட்புக்கு இருவரும் கலந்து பழகி இணைந்து ஊர் சுற்றவோ, அல்லது இணைந்து வாழவோ வேண்டும். இதில் காமம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

காமம் என்பது முழுமையாக வேறு ஒரு உணர்வைத் தூண்டும் விஷயம். இதுவும் இரண்டு பேருக்கு இடையில் – அவர்கள் எந்தப் பாலினமாக இருந்தாலும் – நடைபெறும் ஒரு நிகழ்வு. An action.

இதை ஏன் அறிவியல் இப்படி மூன்றாக பிரிக்கிறது என்பதுதான் கேள்வி. இந்த உணர்வுகள் நமக்கு வரும்போது நம்மில் நிகழும் வேதி மாற்றங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதற்குமுன் ஒரு டிஸ்களைமர்: இந்த உணர்வுகளுக்கும் இதயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. காமமோ, கடலையோ அது மூளையில் சுரக்கும் சில ஹார்மோன்களால் நிகழும் உணர்வுகள்தான் என்று அறிவியல் சொல்கிறது.

இந்த மூன்று உணர்வுகளுக்கும் மூன்று விதமான ஹார்மோன்கள் சுரக்கின்றன:

– ஈர்ப்புக்கு டோபமைன், நாரேபினேப்ரின், சேரோடோனின் போன்றவை சுரக்கின்றன. (Dopamine, Norepinephrine, Serotonin)

– உறவு அல்லது நட்புக்கு ஆக்ஸிடோசின் அல்லது வாசோப்ரேஸ்சின் சுரக்கின்றன. (Oxytocin, Vasopressin)

– காமத்துக்கு ஆணுக்கு டெஸ்டோஸ்டெரோன் மற்றும் பெண்ணுக்கு எஸ்ட்ரோஜென் சுரக்கின்றன. (Testosterone, Estrogen)

காதல் என்ற ஒன்றுக்கென பிரத்தியேகமாக எந்த ஹார்மோனும் இல்லை என்பதால் அது ஒரு கற்பனை உணர்வுதான். நீங்கள் ஒரு ஆணாக இருந்து உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து வெறும் டோபமைன் மட்டுமே சுரந்தால் அந்தப் பெண் மீது வெறும் ஈர்ப்பு மட்டுமே வருகிறது என்று அர்த்தம். அவளை டேட்டிங் அல்லது கல்யாணம் செய்ய முடியாது. அதேநேரம் வேறு பெண்ணைப் பார்த்து டெஸ்டோஸ்டெரோன் மட்டுமே சுரந்தால் அவளிடம் வருவது ஈர்ப்பு அல்ல, வெறும் காமம். வேறு பெண்ணைப் பார்த்து ஆக்ஸிடோசின் சுரந்தால் அவளுடன் வெறுமனே படுத்து எந்திரிப்பது தாண்டி, தொடர்ந்த ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பீர்கள். அதனைக் காதல், இணைந்து வாழ்தல், அல்லது கல்யாணம் போன்ற வார்த்தைகளில் கலாச்சாரம் சொல்கிறது.

டோபமைன் மற்றும் நாரேபினேப்ரின் போன்றவை நம்மை தலை கிறுகிறுக்க வைக்கின்றன. ‘எகிறி குதித்தேன் வானம் இடித்தது, பாதங்கள் இரண்டும் பறவையானது’ என்று பாட்டுப் பாட வைக்கிறது. இதே டோபமைன்தான் கோக்கேன் உறுஞ்சுபவர்களுக்கும் அதிகளவில் சுரக்கும் ஹார்மோன். அதுதான் அவர்களை அதீத உற்சாகம் கொள்ளவும் வைக்கிறது. கோக்கேன் நிறுத்தப்பட்டால் டோபமைன் சுரப்பது நின்றுபோய் எகிறி குதித்தால் வானம் என்ன, விட்டம் கூட இடிக்காது. அப்போது உடல் கோபம் கொள்ளும். கோக்கேன் தேடி அலையும். பிடித்த பெண் கழட்டி விட்டுப் போனால் நமக்கு வருவதும் அதே பிரச்சினைதான். சுரந்துகொண்டிருந்த அந்த டோபமைன் நின்று போய் விட, நமக்கு பைத்தியம் பிடிக்கிறது. சிலர் தாடி வளர்த்து சரக்கடிக்க ஆரம்பிக்கிறோம். சிலர் ‘எவன்டி உன்னைப் பெத்தான்’ என்று கோபத்தில் பாடுகிறோம். சிலர் ஆசிட் வாங்க கடைக்குப் போகிறோம். ‘காதல் ஒரு போதை’ என்று எந்தக் கவிஞன் எழுதினானோ அவனுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்.

அதாவது சொல்ல வருவது என்னவெனில், வேதியியலைப் பொருத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லாம் கிடையாது. உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத பெண்ணிடம் கூட உங்களை ‘காதல்வயப்பட’ வைக்க முடியும். அப்படி செய்ய வேண்டுமெனில் அவள் ஏரியாப் பக்கம் வரும்போதெல்லாம் உங்கள் காஃபியில் அல்லது டீயில் ஒரு டோபமைன் supplementஐ கலந்து விட்டால் தீர்ந்தது கதை. Oldboy எனும் கொரியப் படத்தில் வில்லன்கள் திட்டமிட்டு ஒருவனை ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் மையல் கொள்ள வைப்பார்கள். அந்தப் பெண்ணுக்காக அவன் பைத்தியமாக அலைவான். அவன் காதலித்திருக்கவே கூடாத ஒரு பெண் என்பது கடைசியில் தெரிய வரும். அதெல்லாம் அறிவியல் பூர்வமாக செய்வது இன்று மிக சுலபம்.

கடைசியில் இவை எல்லாமே நமது மரபணு தன்னை புதுப்பித்துக்கொள்ள நம்மிடையே செய்யும் சித்து வேலைகள்தான். அழகான பெண்ணிடம் அல்லது கட்டுமஸ்தான ஆணிடம் வரும் ஈர்ப்பு புதுப்பிக்கப்படும் அந்த மரபணு அழகாகவோ அல்லது கட்டுமஸ்தானதாகவோ உருவாகும் என்ற சுயநல எதிர்பார்ப்பு தாண்டி வேறில்லை.

எனவே ஈர்ப்பு, காமம், உறவு எல்லாம் எந்தப் பெண்ணைப் பார்த்து எந்த போதை சுரப்பி உள்ளே சுரக்கிறது என்பதைப் பொருத்தது. ஒன்று புனிதம், இன்னொன்று அபச்சாரம் என்பதெல்லாம் பொய்யாய் பழங்கதையாய் மெல்லப் போய் ரொம்ப நாளாகிறது.

Sridhar Subramaniam