“ஏ.ஆர். முருகதாஸின் ‘சர்கார்’ திருட்டுக் கதை தான்”: திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆதாரம்!

0a1cவருண் என்ற கே.வி.ராஜேந்திரன் ‘செங்கோல்’ என்ற கதை எழுதி, அக்கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியிருக்கும் ‘சர்கார்’ திரைப்படம், தனது ‘செங்கோல்’ கதையை திருடி எடுக்கப்பட்டிருக்கிறது என்று வருண், நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைவராக இருக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

பாக்யராஜ் உள்ளிட்ட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் இப்புகார் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையின் இறுதியில், முருகதாஸின் ‘சர்கார்’ கதையும், வருணின் ‘செங்கோல்’ கதையும் ஒன்றே என்ற முடிவுக்கு பெரும்பாலான நிர்வாகிகள் வந்தனர். இதனையடுத்து, ‘சர்கார்’ படத்தில் “கதை – வருண்” என போட வேண்டும் என்றும், கதைக்குரிய தொகையை வருணுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் முருகதாஸை கேட்டுக்கொண்டனர்.

ஆனால், முருகதாஸ் இக்கோரிக்கைகளை ஏற்க மறுக்கவே, எழுத்தாளர் சங்கம் சார்பில் வருணுக்கு ஒரு கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில், “தெளிவாக விவாதித்து, ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும், மெஜாரிட்டி மெம்பர்களின் ஒப்புதலின் பேரில், தெளிவாக ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படக்கதையும் ஒன்றே என முடிவு செய்தோம். இக்கடிதத்தின் மூலம், சங்கத்தின் உறுப்பினரான திரு.வருண் (எ) கே.வி.ராஜேந்திரன் ஆகிய உங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், 21.11.2007-ல் பதிவு செய்த ‘செங்கோல்’ என்ற கதையும், ‘சர்கார்’ படக்கதையும் ஒன்றே என சங்கம் தனது முடிவை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் பக்க நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை நாங்கள் தடை செய்ய மாட்டோம். முழுமையாக உங்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து வருண் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையைத் திருடி ‘சர்கார்’ என்ற தலைப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் எடுத்துள்ளார். எனவே அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

வருண் தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் முன்பு நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜரானார். அப்போது நீதிபதி, இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆகியவை வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.