“மானஸ்தன்” சரத்குமார் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்!

நல்ல பாம்பும் சாரை பாம்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதுபோல், சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழ்நாட்டில், “மானஸ்தன்” என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வருபவர் நடிகரும் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் தான். 2004ஆம் ஆண்டு பாரதி இயக்கத்தில் வெளிவந்த ‘மானஸ்தன்’ திரைப்படத்தில் “மானஸ்தனாக” அவர் நடித்திருந்தார் என்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல…

முதலில் தி.மு.க.வுடன் “மானஸ்தனாக” கைகோர்த்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். அடுத்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் “மானஸ்தனாக” அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து, 2 தொகுதிகள் வாங்கி, அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியேறுவதாக “மானஸ்தனாக” அறிவித்துவிட்டு, அ.தி.மு.கவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடனான சந்திப்புக்குப்பின், பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக “மானஸ்தனாக” அறிவித்தார்.

அப்போது பாக்ஸ் ஆபீஸ் பாஸ் என்பவர் முகநூலில் பதிவிட்ட பதிவு: “சோறு கண்ட இடம் சொர்க்கம்’ன்னு சொல்ற மாதிரி…. யாரு சீட் குடுப்பாங்க, யாராச்சும் கூட்டணிக்கு கூப்பிட மாட்டாங்களா’ன்னு காத்திருக்கிற சில ‘தம்பிடிக்கு பிரயோஜனமில்லாத’ அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர் எங்கள் ‘மானஸ்தன்’ சரத்குமார். ‘அரசியல்’ல இருக்கிற ஒரு மனுஷனுக்கு கொள்கை, கொட்டச்சி, ஈரம், வெங்காயம் எல்லாம்கூட இல்லாம இருக்கலாம்… ஆனா, மனுஷன்னா சூடு, சொரணை, மானம், வெட்கம் எல்லாம் இருக்கணும்ல..? அதையெல்லாம் எப்பவோ தொடைச்சு தூர எறிஞ்சிட்டாரு எங்க தலைவன்! ஒரு 10, 15 வருஷம் “கலைஞர்’ தான் எல்லாம், அவருக்காக உயிரையும் கொடுப்பேன்”ன்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு நல்லா சம்பாதிச்சுட்டு திரிஞ்சாச்சு. அதுக்கப்புறம் 5 வருஷம் “அம்மா தான் எல்லாம்”ன்னு ஒப்பியடிச்சாச்சு. நடுவுல, இந்த நடிகர் சங்கம்… ஊழல்… எல்லாம் ஒபாமாவுக்கே தெரியும். சினிமாவுல போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு மொக்கை படமா நடிச்சுத் தள்ளியாச்சு. இதுக்கு மேல படம் எடுக்கணும்ன்னு சொன்னா வீட்டுக்காரம்மா துப்பிடுவாங்க. (சமீபத்துலகூட ‘சண்டமாருதம்’ன்னு ஒரு காவியம் வந்ததே!) வேற என்ன, “அடுத்து பாஜக குடியைக் கெடுக்க கெளம்புவோம்.” இந்த லட்சணத்துல தனக்குத்தானே “புரட்சித் திலகம்” (புரட்சித் தலைவர் + மக்கள் திலகம்) அப்படின்னு பேரு ஒண்ணுதான் குறைச்சல்…!”

இப்படி “மானஸ்தனாக” பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஒரு மாதம்கூட ஆகவில்லை… இன்று மீண்டும் “மானஸ்தனாக” போயஸ் தோட்டம் வந்து ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப்பின், ”வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி செயல்படும். சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் மீண்டும் இணைத்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று திருவாய் மலர்ந்தார் “மானஸ்தன்” சரத்குமார்.

“மானஸ்தன்”… “மானஸ்தன்” தான்…!

– அமரகீதன்