“தியேட்டர் கேன்டீன் பாப்கார்ன் விலையை குறைங்கப்பா”: தயாரிப்பாளர் ‘பொளேர்’!
“தியேட்டர்களில் டிக்கெட் விலை குறைப்பு பற்றி பேசும் திரையரங்க உரிமையாளர்கள் முதலில் தியேட்டர் கேன்டீன்களில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களின் அநியாய விலையைக் குறைக்க வேண்டும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.
சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் ‘சாரல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது:
இப்போதெல்லாம் படம் எடுப்பதைவிட, அதை வெளியிடுவதுதான் மிகவும் சிரமமாக உள்ளது. இப்போதுகூட செங்கல்பட்டு ஏரியா திரையரங்குகளில் தாணுவின் படத்தை வெளியிட முடியாத சூழலை சிலர் உருவாக்கியுள்ளனர். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற தயாரிப்பாளர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம்.
தாணு என்ற பெரிய தயாரிப்பாளருக்கே இந்த நிலை என்றால், சிறு பட்ஜெட்டில் படமெடுப்பவர்கள் இவர்களிடம் என்ன பாடுபடுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
தியேட்டர்களில் கட்டணங்களை குறைக்க வேண்டும், படங்களுக்கு எம்ஜி முறை கூடாது என்றெல்லாம் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள். கட்டணத்தை குறைப்பது இருக்கட்டும். முதலில் அங்குள்ள கேண்டீன்களில் விற்கப்படும் பாப்கான், தண்ணீர் பாட்டில் உல்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பாருங்கள்.
தியேட்டர்களுக்கு மக்கள் வராமல் போகக் காரணம் என்ன? திருட்டு விசிடி மட்டுமா? என்னதான் இணையதளங்களில் படங்கள் வெளியானாலும், நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்காமல் இருந்ததில்லை. ஆனால் அப்படிப் பார்க்க நல்ல அரங்குகள் வேண்டாமா?
சென்னைக்கு வெளியே பல தியேட்டர்கள் மக்கள் படம் பார்க்கும் நிலையிலா இருக்கின்றன? அடிப்படை வசதி இல்லை. கேன்டீன்களில் அநியாய விலை. தேவையற்ற பார்க்கிங் கட்டணம் இப்படி ஏகப்பட்ட குறைகளைச் சொல்கிறார்கள் மக்கள். இதனால் தியேட்டருக்கு வரத் தயங்குகிறார்கள்.
அதேபோல, தயாரிப்பாளர்களுக்குத் தரவேண்டிய சதவீதத்தை யாரும் ஒழுங்காகத் தருவதில்லை. சென்னை அரங்குகள் சரியாகத் தருகின்றன. ஆனால் மற்றவர்கள் அப்படியா? தினந்தோறும் மக்களிடம் பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் அந்தப் பணத்தை வாரம் ஒரு முறையாவது தயாரிப்பாளருக்குத் தருகிறார்களா? இல்லை. பல தயாரிப்பாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்களுக்குரிய பங்கைத் தந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இப்படி சினிமாவை முடக்குவதற்கான அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வந்தால்தான் சினிமா தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடியும்.
இவ்வாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.