பிப்ரவரி 11ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘கடைசி விவசாயி’

’காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடைசி விவசாயி’.

நல்லாண்டி என்ற முதியவர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் விவசாயம் மற்றும் விவசாயிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றான இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துப்பட்டு வருவதால் பல திரைப்படங்கள் வெளியாக தயாராகி வரும் நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘கடைசி விவசாயி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட ‘கடைசி விவசாயி’ படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.