வங்கியில் பணம் மாற்ற வருபவர் விரலில் ‘அடையாள மை’: இன்று முதல் அமல்!

ரூ.1000, 500 செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பெரும் சிரமத்துக்கு ஆளாகி வரும் சாதாரண பொது மக்கள் மோடி மீதும், அவரது அரசு மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதனால் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மோடி அரசு நேற்று அறிவித்தது.

வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்களின் சிரமம் கருதி சில சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கெடுபிடி நடவடிக்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் பொருளாதார விவகார செயலர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “வங்கிகளில் பணம் வாங்க வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும். ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவதால்தான் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுகிறது. கைவிரலில் மை வைப்பதால் ஒரே நபரே அடிக்கடி பணம் மாற்றுவது தடுக்கப்படும். தேர்தல் வாக்குச்சாவடியை போல வங்கியின் கவுண்டரில் மை வைக்கப்படும். கை விரலில் மை வைக்கும் நடைமுறை பெரு நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வரும்” என்றார்.

மோடியை ஆட்சியில் அமர்த்துவதற்காக பொது மக்கள் தங்கள் விரலை ஒரேயொரு முறை மையால் அசிங்கப்படுத்திக் கொண்டார்கள அல்லவா? அதற்கு பிரதிபலனாக இனி தினம் தினம் மையினால் அவர்களது விரலை அசிங்கப்படுத்தும் மோடி அரசு!

“பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்று சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்! நாம் கேட்டால் தானே!!