“ஜல்லிக்கட்டு காளையை சட்டக்கயிறு தடுக்க இயலாது!” – சீமான்

“வாடிவாசலில் வந்து நிற்கும் ஜல்லிக்கட்டு காளையை இனி சட்டக்கயிறு போட்டு தடுக்க இயலாது. நம்பிக்கை திமிலோடு காளை பாய, அதை நம் இளையோர் அடக்க, புன்முறுவல் உவகையோடு தொடங்கட்டும் தமிழர் புத்தாண்டு” என்று சீமான் கூறியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

காரிருள் நீக்கி, கொடும்பகை அழித்து, புத்தொளி வீசி, புவி அருள் செய்யப் புறப்பட்டு வருகிறது தமிழரின் புத்தாண்டு. காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் அன்னைத் தமிழினம் விழிகளின் ஓரம் நம்பிக்கைச் சிவப்பேற்றி வரும் நாட்கள் வாழ்வினைத் தரும், வசந்தத்தினை வரவேற்கும் எனக் காத்துக் கிடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக உரிமை மறுக்கப்பட்டு, நிலம், நீர், காடு என அனைத்தையும் இழந்துவிட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் தங்கள் அடிமை இருள் நீங்க தங்களைத் தாங்களே மீள் எழுப்பி ஒரு புதிய புரட்சிப் பூபாளம் இசைக்க அணியமாகி இருக்கிறார்கள்.

பாதையைத் தேடாதே, உருவாக்கு என்று முழங்கிய எனதுயிர் அண்ணன் எமது தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனை தத்துவமாகவும், வாழ்வியல் நெறியாகவும் கொண்டு தமிழக வீதிகளில் புதிய இளம் தலைமுறை பிள்ளைகள் எதிர்காலம் கையளிக்க இருக்கிற நம்பிக்கைகளைச் சார்ந்து குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.

கொடும் போரினாலும், மழை நீரினாலும் அல்லலுற்ற அன்னைத் தமிழினம் மலரும் புத்தாண்டில் தங்களுக்குத் தாங்களே கரம் கோர்த்து, கட்டமைத்து மீள் எழுப்ப எத்தனித்து வருகிறார்கள். எம் மண்ணின் நிலவளம், நீர்வளம், காட்டுவளம், கனிமவளம் பாதுகாக்க தமிழின இளையோர் தாயகத் தமிழகத்தில் தயாராகிவிட்டார்கள். வாடிவாசலில் வந்து நிற்கும் ஜல்லிக்கட்டுக் காளையை இனி சட்டக்கயிறு போட்டு தடுக்க இயலாது. நம்பிக்கை திமிலோடு காளை பாய, அதை நம் இளையோர் அடக்க, புன்முறுவல் உவகையோடு தொடங்கட்டும் தமிழர் புத்தாண்டு.

அனைத்து நம்பிக்கைகளையும் அள்ளி எடுத்துக் கொண்டு, புதுப்புனலாய் தை நீராள் தவழ்ந்து வருகிறாள். சாணி மெழுகிய தரையில், அரிசி மாவில் கோலமிட்டு, புதுப்பானை மஞ்சள் இட்டு, மாட்டுக்கும், மனிதருக்கும் , நாட்டுக்கும் நல்லவருக்கும், நல்லவை விளைய, அல்லவை ஒழிய புதுப்பொங்கல் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைத் திருவிழாவான தமிழ்ப்புத்தாண்டில் தொடக்க நாளான தை முதல் நாளில் எனது தாய்த்தமிழ் உறவுகளுக்கு நம்பிக்கைக் கரங்களோடு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை அள்ளித் தருகிறேன்.

அநீதிக்கு எதிராக, இனப்படுக்கொலைக்கு எதிராக, தீண்டாமை, சாதிமத ஏற்றத்தாழ்வு, மணல்கொள்ளை, மது, மறுக்கப்பட்ட நீர் நில உரிமைகள், பஞ்சம் ,பசி, பட்டினி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமை, வேலைவாய்ப்பின்மை, தீண்டாமை, மண்ணின் வளச்சுரண்டல், மக்களின் நலச்சுரண்டல் என அனைத்து இழிவுகளுக்கும், அழிவுகளுக்கும் எதிராக.. உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பொங்கட்டும் எழுச்சிப்பொங்கல்.

என் உயிருக்கு இனிப்பான தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும், என் இனிய தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Read previous post:
peta
‘பீட்டா’ தோழர்களுக்கு ஓர் உள்ளூர்க்காரன் எழுதும் லெட்டர்!

அன்புள்ள 'பீட்டா' தோழர்களுக்கு... விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு முதலான வேர்களின்

Close