தியாகு – கொளத்தூர் மணி விசாரணை அறிக்கை: சக்தி – கௌசல்யா கருத்து!
சக்தி மீதான புகார்கள் குறித்து தியாகு – கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்து சக்தி கூறியிருப்பதாவது:
தோழர்கள் தியாகு கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் குறிப்பிட்டவற்றை மட்டும் ஏற்பதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. அதற்கு உட்பட்டுத்தான் அந்த அமர்வுக்கு வந்தேன். இப்போதும் அதில் உறுதியோடு இருக்கிறேன். ஆனால் அறிக்கையில் குறிப்பிடப்படாத, நான் செய்யாத தவறுகளுக்கு என்னை அந்த அறிக்கையின் ஊடாகவே உட்படுத்தும் போக்கு உலா வருகிறது.
அறிக்கை சொல்லாத, நான் செய்யாதவைகளை அவதூறாகப் பரப்பிக் கொண்டிருப்பதன் மூலம் அந்த அறிக்கை மீது நடக்காதவற்றை ஏற்ற முற்படுவது அந்தத் தலைவர்களை அவமதிப்பதாகவே கருதுகிறேன்.
‘அந்த பெண்’ என்னுடைய அல்லது யாருடைய வற்புறுத்தலாலும் கருக்கலைப்பு செய்யவில்லை. நான் அதனைத் தடுத்தேன். அதை மீறி கலைத்த பிறகே தகவல் சொன்னார். 6 மாதக் கருக்கலைப்பு என்பது அப்பட்டமான பொய்! இதை அந்தப் பெண்ணே ஏற்க மாட்டார். தலைவர்களுக்கு இது நன்கு தெரியும்.
காதல் உறவில் நிகழ்ந்த முறிவு, இணைவு என்பது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான விடயங்கள். எதுவும் தெரியாமல் அது குறித்து விவாதம் செய்வது அநாகரிகமான செயல். ஏற்கத்தக்கதல்ல. எனக்கு விதித்திருக்கும் தண்டனை இது தொடர்பாகவே அல்ல.
நிமிர்வு கலையகத்திற்குள் நடந்ததாகக் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை. இதுநாள் வரை அது போன்று எந்தவொரு நிகழ்வும் நிமிர்வு கலையகத்திற்குள் நடைபெறவில்லை.
இதனை மீறி என் மீது குறை காணுபவர்களும் அதை பரப்புகிறவர்களும் சட்டரீதியான வழக்குகளை தொடுக்கட்டும். சந்திக்க நான் தயாராகவுள்ளேன்.
அதை விடுத்து அவதூறுகளையும் வீண் வதந்திகளையும் பரப்புவர்களின் மனநிலையையும் செயல்பாடுகளையும் எண்ணி வருத்தம் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு சக்தி கூறியுள்ளார்.
கௌசல்யா கூறியிருப்பதாவது:
தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் அறிக்கையில் என் மீது சொல்லப்பட்ட பிழையை மட்டுமே நான் ஏற்கிறேன். மற்ற அவதூறுகளை மறுக்கிறேன். 6 மாத கருக்கலைப்பு என்பதும் அதற்கு நான்தான் காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். அதில் உண்மையும் இல்லை. இது தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
என்னுடைய பிழை என்பது, சக்திக்கு முன்பு சில காதல்கள் இருந்திருக்கிறது; சில போக்குகள் இருந்திருக்கிறது;தெரிந்தே நான் விரும்பியதும், திருமணம் செய்துகொண்டதும் மட்டும்தான். இந்த அடிப்படையில் நான் செய்தது பிழை என்று அறிக்கையில் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
நானும் சக்தியும் கருக்கலைப்புக்கு பொறுப்பு அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
இவ்வாறு கௌசல்யா கூறியுள்ளார்.