ரோசய்யா – வெளியே! பாஜகவின் வித்யாசாகர் ராவ் – உள்ளே!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன்) நிறைவடைகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரின் பெயர்களை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் விதயாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ் (வயது 71). முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் கரீம்நகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அவர் 3 முறை ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.