ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக புதுமுகம் மருது கணேஷ் அறிமுகம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து கடந்த 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று (செவ்வாய்) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். முதன்மைச் செயலாளர் துரைமுருகன், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன், ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். தேர்தலில் வெற்றி பெற என்னென்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்கொள்ள முடியுமா? எவ்வளவு செலவு செய்ய முடியும்? தொகுதியில் எந்த அளவுக்கு உங்களுக்கு செல்வாக்கு உள்ளது? என பல்வேறு கேள்விகள் நேர்காணலின்போது கேட்கப்பட்டன.

நேர்காணல் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், “ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் முடிந்துள்ளது. வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்து புதன்கிழமை அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி. அதிமுகவின் மூன்று பிரிவுகள் போட்டியிட்டாலும், டிடிவி தினகரன் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை” என்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருகிற 12-4-2017 அன்று நடைபெற இருக்கும் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.மருது கணேஷ் என்கிற என்.எம்.கணேஷ் வழக்கறிஞர். ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளர். இதற்குமுன் தேர்தல் களம் காணாத புதியவர்.

டிடிவி தினகரனை எதிர்த்து திமுக ஒரு புதுமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.