விண்ணப்ப படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: ஜெ.தீபா மீது போலீசில் புகார்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை  தொடங்கினார். இந்த பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை என்று கூறி தீபாவின் கணவர் மாதவன் போர்க்கொடி தூக்கினார். தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தீபா வீட்டில் இருந்து மாதவன் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர், இன்று காலை தீபா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் விண்ணப்பப் படிவம் பெற, தீபா பணம் வசூலித்ததாகவும்,  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அங்கீகாரம் ரத்தானதை மறைத்து,  தீபா பணம் வசூலித்து வருவதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.