“அரசியலின் ஆழம் தெரிந்ததால் தான் தயங்குகிறேன்”: ரஜினி ஓப்பன் டாக்!

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி, இன்று காலை  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம் ஆகியோர் கலந்துகொண்டு ரஜினியை புகழ்ந்து பேசினார்கள். அவர்களையடுத்து ரஜினி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நான் அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா என்று எல்லோரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது சம்பந்தமாக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களோ இல்லையோ, ஊடகங்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கின்றன.. நான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன். 1996-லேயே வந்துவிட்டேன்.

போர் வரும் என்றாரே… எப்போது வரும் என்கிறார்கள். போர் தான் தேர்தல். யுத்தத்தில் இறங்கினால் ஜெயிக்க வேண்டும். அதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும்.

அரசியலில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், அரசியலின் ஆழம் தெரிந்ததால் தான் நான் தயங்குகிறேன். இவை தெரியாமல் இருந்திருந்தால் ஓ.கே. என்று எப்போதோ சொல்லியிருப்பேன்.

வருகிற 31ஆம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறேன். என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை, 31ஆம் தேதி தெரிவிக்கிறேன் என்று தான் சொல்லியிருக்கிறேனேயொழிய, அரசியலுக்கு வருவேன், அல்லது வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை.

இவ்வாறு ரஜினி கூறினார்.

ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி, வரும் 31ஆம் தேதி வரை தினமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.