“குற்றவாளி ஜெ. சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும்!”

ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவருடைய நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி ஒருவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது சட்ட விரோதம் என்பதால் மெரினாவில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரியுள்ளனர். மேலும், ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள்  கூறியதாவது:

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அதன் குறியீடாக உள்ள ஜெயலலிதாவின் படங்கள் அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். மாணவர்களின் பைகள், பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்கள் நீக்கப்பட வேண்டும்.

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் ஆகியவற்றில் உள்ள ‘அம்மா’வை அகற்ற வேண்டும். அவர் முதல்வராக இருக்கும்போது இந்த பெயர்கள் வைக்கப்பட்டாலும் தற்போது அவர் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. எனவே இந்தப் பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும்.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். ஒரு குற்றவாளியின் நினைவிடத்தை அரசு பராமரிப்பது சட்ட விரோதம். எனவே, ஜெயலலிதா நினைவிடம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.