‘ரெமோ’ படவிழாவில் சென்சார் செய்யாமல் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட தகவல்!

அமரர் சிவாஜி கணேசன் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப பேசுவதில் வல்லவர். அவர் கிண்டலும் கேலியுமாய் பேசுவதைக் கேட்டு ரசித்து சிரிக்காமல் எவராலும் இருக்க முடியாது. தனக்கு ஏற்பட்ட அத்தகைய ஒரு அனுபவத்தை, ‘ரெமோ’ படவிழாவில் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி, வர்த்தக ரீதியாக அமோக வசூலை பெற்றுவரும் ‘ரெமோ’ திரைப்படத்திற்கு தங்களின் ஆதரவை தொடர்ந்து அளித்துவந்த விநியோகஸ்தர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, அப்படத்தின் தயாரிப்பாளரும், 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனருமான  ஆர்.டி.ராஜா  ஒரு பிரமாண்ட நன்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்ற இந்த நன்றி விழாவில், ‘ரெமோ’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியம், சேலம் ராஜமன்னார், மதுரை அழகர்சாமி, வட ஆற்காடு  – தென் ஆற்காடு ஸ்ரீநிவாசன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், திருச்சி பிரான்சிஸ் அடைக்கலராஜ், திருநெல்வேலி பிரதாப் ராஜா, வெளிநாட்டு விநியோகஸ்தர் யஹிரா பாய் ஆகியோரும், ‘ரெமோ’ படக்குழுவினரான தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிரூத், சவுண்ட் என்ஜினீயர்  ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ரூபன், ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி, பாடலாசிரியர்கள் விவேக் – கு.கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆன்சன், யோகி பாபு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

‘ரெமோ’ படத்தில் இயக்குனராகவே நடித்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இவ்விழாவில் பேசுகையில் கூறியதாவது:

ஒரு திரைப்படத்திற்கு நன்றி விழா என்பதை நான் இப்போது தான் முதல்முறையாக பார்க்கிறேன். சினிமா மீது அளவு கடந்த அன்பும், சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்து கொள்ளும் குணமும் கொண்ட மனிதர்களால் தான் இத்தகைய செயல்களை செய்ய முடியும். அப்படி நான் பார்த்த  தயாரிப்பாளர்களுள்  ஆர்.பி.சௌத்ரி சாரும், ஏ.எம்.ரத்னம் சாரும் சிலர். அப்படி ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் ஆர்.டி.ராஜாவை பார்க்கிறேன்.

‘ரெமோ’ படத்தின் உண்மையான வெற்றிக்கு சான்றாக திகழ்பவர்கள் விநியோகஸ்தர்கள். அவர்களை மேடையேற்றி, தன்னுடைய நன்றிகளை தெரிவித்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவிற்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

‘ரெமோ’ படத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் இருவேறு கொட்டப்களில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்குமுன் கமல்ஹாசன் நான் இயக்கிய ‘அவ்வை சண்முகி’ படத்தில் இதுபோல் நடித்திருந்தார். ‘அவ்வை சண்முகி’ என்றவுடன் எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதை இங்கு சொல்லலாமா? கூடாதா? என்று தெரியவில்லை. சொல்லுகிறேன். தேவைப்பட்டால் நீங்கள் சென்சார் பண்ணிக்கொள்ளுங்கள்.

‘அவ்வை சண்முகி’ படத்தில் நாயகி மீனாவின் தந்தையாக முதலில் சிவாஜி கணேசன் தான் நடிப்பதாக இருந்தது. அதனால், அவருக்கு ஏற்ற மாதிரி கம்பீரமாகவும், அவ்வை சண்முகியை ஒருதலையாக காதலிப்பது போல் எல்லாம் இல்லாமலும் அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தோம்.

அப்போது திடீரென சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. “பசங்க என்னை நடிக்க வேணாம்னு சொல்லுறாங்க” என்று கூறி, படத்திலிருந்து விலகிக்கொண்டார் சிவாஜி.

அந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என நாங்கள் குழம்பிக்கொண்டிருந்தபோது, ஜெமினி கணேசனின் பெயரை சிபாரிசு செய்ததே சிவாஜி தான். அதுவும் எப்படி? “டேய்.. ஜெமினி கணேசனை இந்த வேடத்தில் நடிக்க வை. அவன் ஆம்பள, பொம்பள வித்தியாசம் இல்லாம எல்லாரையும் காதலிப்பான். அவனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

அதன்பிறகு தான் நாங்கள் ஜெமினி கணேசனை அணுகி அவரை ஒப்பந்தம் செய்தோம். அவருக்கு ஏற்ற மாதிரி, அவர் அவ்வை சண்முகியை ஒருதலையாக காதலிப்பது போல் எல்லாம் கதாபாத்திரத்தை மாற்றி அமைத்தோம்.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் பேசினார்.