“எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது” – புதிய தலைமுறைக்கு ராம்குமார் கடிதம்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மின்கம்பியை கடித்து மின்சாரத்தை உடலுக்குள் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக சிறைச்சாலை நிர்வாகம் கூறியுள்ளது. ராம்குமார் மரணம் பல சந்தேகங்களை உருவாக்கியுள்ளதால் ராம்குமாரின் உடலை பார்க்க வேண்டும் என உறவினர்கள் முதலானோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை முற்றுகை இட்டுள்ளனர்.

இந்நிலையில்,  ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் மூலம் புதிய தலைமுறை தொலைக்காட்சி கொடுத்தனுப்பியிருந்த கேள்விகளுக்கு ராம்குமார் கடந்த பத்தாம் தேதியே பதில்கள் அளித்து அனுப்பியதாக அத்தொலைக்காட்சி தெரிவித்திருக்கிறது. அந்த பதில்களில் ‘சுவாதியை தனக்கு தெரியவே தெரியாது’ எனவும் ‘சுவாதி கொலை வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ எனவும் ராம்குமார் தெரிவித்திருப்பதாக தொலைக்காட்சியின் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

ramkumarconfession

புதிய தலைமுறை தொலைக்காட்சி கேட்டிருந்த கேள்விகளும் அவற்றுக்கு ராம்குமார் அளித்த பதில்களும்:

1.சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளீர்கள். இந்த வழக்கில் என்ன நடந்தது? உங்கள் தரப்பு விளக்கம் என்ன?

பதில்: தூங்கிக் கொண்டிருக்கும்போது என் வீட்டுக்கு வந்து என்னை பேச விடாமல் கழுத்தை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

2. உங்களை காவல்துறை கைது செய்யும்போது கழுத்தை நீங்களே அறுத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தது உண்மையா? என்ன நடந்தது?

பதில்: இல்லை. போலீசார்தான்.

3.சுவாதியும் நீங்களும் நண்பர்களா? உங்களுக்கு சுவாதியை எப்போதிலிருந்து தெரியும்?

பதில்: எனக்கும் சுவாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

4. நீங்கள் சுவாதியை ஒருதலை பட்சமாக காதலித்ததாக காவல்துறையினர் தெரிவிப்பது உண்மையா? அப்படியானால் உங்கள் காதலை சுவாதி நிராகரிக்க என்ன காரணம்? காதல் நிராகரிப்புதான் கொலைக்கு காரணமா?

பதில்: பொய்

5. சுவாதி குடும்பத்தாருக்கு உங்களை தெரியுமா? சுவாதியின் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது நண்பர்களை உங்களுக்கு தெரியுமா? யாரையாவது சந்தித்துள்ளீர்களா?

பதில்:  இல்லை தெரியாது.

6. நீங்கள் சுவாதியை எப்போதாவது பின் தொடர்ந்தது உண்டா?

பதில்: இல்லை.

7. இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலால் என்பவர் யார்? நீங்கள் அவரை சந்தித்தது உண்டா?

பதில்: தெரியாது

8. இந்த வழக்கில் மதரீதியான பின்புலம்தான் கொலைக்கு காரணம் என்று பேசப்படுகிறது. இது தொடர்பாக உங்களிடம் யாராவது பேசினார்களா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: அது பற்றி எனக்கு தெரியாது.

9. சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகில் சிசிடிவியில் பதிவான உருவம், சம்பவத்தை ஒட்டிய நாட்களில் ஊருக்கு போய் தலைமறைவானது, மேன்சன் அறையில் ரத்தக்கரை படிந்த சட்டை, சுவாதியை வெட்டியதை ஒப்புக்கொண்டு நீங்கள் கொடுத்த வாக்குமூலம், நேரில் பார்த்த 5 சாட்சிகள் என பல ஆதாரங்கள், தடயங்களை போலீசார் முன்வைக்கிறார்கள். இவற்றில் சிறிதும் உண்மையில்லையா?

பதில்: அனைத்தும் பொய். வேண்டுமென்றே ஒருதலை பட்சமாக குற்றவாளியை மறைத்து என்னை துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டினர். என்னிடம் விசாரித்தபோது அந்த பெண் யாரென்றே தெரியாது என்றுதான் கூறினேன்.

10. இந்த கொலை நீங்கள் செய்யவில்லை என்று உங்கள் வழக்கறிஞர் மறுக்கிறார். அப்படியென்றால் யார் செய்திருக்க வேண்டும் என கருதுகிறீர்கள்?

பதில்: எனக்கு தெரியாது.
மேலும்,  தனியே ஒரு துண்டு சீட்டில் “இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்” என எழுதி ராம்குமார் கையொப்பம் இட்டிருக்கிறார்.

புதிய தலைமுறை காணொளியின் சுட்டி:

http://tv.puthiyathalaimurai.com/vod/news/crime/15/57553/i-dont-have-any-connection-with-swathi-murder-ramkumar-wrote-letter-to-puth#