“சீருடையில் இருக்கும் காவலரை தாக்குவது வன்முறையின் உச்சகட்டம்”: ரஜினி கண்டனம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட பல கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் சேப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டக்காரர் ஒருவர் காவல் துறையினரை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டது.

அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.