காவிரி வழக்கு: மோடி அரசுக்கு அவகாசம் கொடுத்து தமிழகத்தை ஏமாற்றிய உச்சநீதி மன்றம்!

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

அதில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய மோடி அரசு அமைக்க வேண்டும்” என உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிந்து பின்னரும் மோடி அரசு ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) எதையும் அமைக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடியும் கடைசி நாளில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மோடி அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியது.

பின்னர், மோடி அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, குறிப்பாக செயல் திட்டம் (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு, கர்நாடகாவும், தமிழகமும் இரு வேறுபட்ட விளக்கங்களை அளிக்கின்றன. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். அத்துடன் கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மோடி அரசு உரிய முறையில் அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக எடுபிடி அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், தமிழகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதன்படி,  இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுபோலவே, ‘ஸ்கீம்’ குறித்து மோடி அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட பிற மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரணை செய்தது.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

‘‘உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை நீங்கள் (மோடி அரசு) நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29ஆம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை? நாங்கள் உத்தரவு பிறப்பித்தபின் அதனை நீங்கள் கட்டாயமாக செயல்படுத்துவதில் உங்களுக்கு பிரச்சனை ஒன்றும் இல்லையே. பிறகு எதனால் தாமதம் ஏற்படுகிறது?

 நதிநீர் பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை (ஸ்கீமை) நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கினோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

மோடி அரசை கண்டிப்பது போலவும், கெடுபிடி காட்டுவது போலவும் இவ்வாறு பேசிய நீதிபதிகள், நீதிமன்றத்தை அவமதித்த மோடி அரசுக்கு எதிராக ஆணை பிறப்பிக்காமலும், ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பது என்ன என்பதை விளக்காமலும், மோடி அரசு விரும்புகிற விதமாய் கால அவகாசம் அளித்து கூறியதாவது:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ‘செயல் திட்டத்தை’ (ஸ்கீமை) தயாரித்து, அதை மே 3ஆம் தேதிக்குள் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மோடி அரசு அதை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும்.  கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே  3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுக்க போராட்டம் நடந்துவரும் நிலையில், வழக்கை இன்னும் பல நாட்கள் இழுத்தடிக்கும் விதத்தில் உச்சநீதி மன்றம் மோடி அரசுக்கு கால அவகாசம் கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

ஆனால், தமிழக எடுபிடி அரசின் சட்ட அமைச்சர் சண்முகமோ, “நீதிபதிகளின் இன்றைய உத்தரவு தமிழகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி” என்று புளுகியிருப்பது தமிழக மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.