ஆர்.ஆர்.ஆர் – விமர்சனம்

நடிப்பு: ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர்

இயக்கம்: எஸ்.எஸ்.ராஜமௌலி

தயாரிப்பு: டி.வி.வி.தானய்யா

இசை: கீரவாணி

ஒளிப்பதிவு: செந்தில்குமார்

தமிழக வெளியீடு: ‘லைக்கா’ சுபாஸ்கரன்

’பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய பிரமாண்ட திரைப்படங்களின் பிரமாண்ட வெற்றி மூலம் இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பு என்பதால் திரைப்பட பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள படம் ‘ரத்தம் ரணம் ரவுத்திரம்’ – சுருக்கமாக ‘ஆர்.ஆர்.ஆர்’.

1920-களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் என்ற இரண்டு தெலுங்குமண்ணின் மைந்தர்களின் பெயர்களையும், பின்னணியையும் மட்டும் எடுத்துக்கொண்டு, கணிசமான அளவு கற்பனையைக் கலந்து, பிரமாண்டமான பொழுதுபோக்குப் படமாக இப்படத்தை மாற்றி படைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

அல்லூரி சீதாராம ராஜுவாக தெலுங்கு திரையுலகின் ஒரு மாஸ் ஹீரோவான ராம் சரணும், கோமாரம் பீமாக இன்னொரு மாஸ் ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆரும் பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்.

0a1e

1920களில், ஆந்திராவில் உள்ள அதிலாபாத் என்ற காட்டுப்பகுதியில் படக்கதை ஆரம்பமாகிறது. இப்பகுதிக்கு பிரிட்டிஷ் ஆட்சியாளரான கவர்னர் ஸ்காட் துரை தன் மனைவியுடன் டெல்லியிலிருந்து சுற்றுலா வருகிறார். வந்த இடத்தில் மல்லி என்ற பழங்குடிச் சிறுமியின் ஓவியம் வரையும் திறமை கண்டு வியக்கும் கவர்னரின் மனைவி, அச்சிறுமியை தன்னுடன் டெல்லிக்கு தூக்கிச் சென்றுவிடுகிறார்.

இதனையறிந்த பழங்குடி பாதுகாவலனான கொமாரம் பீம் (ஜூனியர் என்.டி.ஆர்), சிறுமியை மீட்பதற்காக தன் ஆட்களுடன் டெல்லி வருகிறார். கொமாரம் பீமை பிடித்துக் கொடுக்கும் காவல்துறை அதிகாரிக்கு சிறப்புப்பரிசும், பதவி உயர்வும் கிடைக்கும் என்று கவர்னரின் மனைவி அறிவிக்கிறார்.

உரிய அங்கீகாரம் கிடைக்காமல் நொந்துபோயிருக்கும் காவல்துறை அதிகாரி அல்லூரி சீதாராம ராஜு (ராம் சரண்), இதை தனக்கான வாய்ப்பாகக் கருதி கொமாரம் பீம்மை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இதற்கிடையில், அல்லூரி சீதாராம ராஜுவும், கொமாரம் பீமும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளாமலே சந்தர்ப்ப சூழ்நிலையால் நட்பு கொள்ளுகிறார்கள். இந்த நட்பு, கொமாரம் பீம் காதலுக்கு அல்லூரி சீதாராம ராஜூ உதவும் அளவுக்கு வளர்ந்துவிடுகிறது.

இந்நிலையில், தன் இனச் சிறுமியை கொமாரம் பீம் மீட்டாரா? அல்லது அவரை அல்லூரி சீதாராம ராஜு தடுத்து தோற்கடித்து, பதவி உயர்வு பெற்றாரா? என்பது மீதிக்கதை.

நாயகர்களான ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பழங்குடி பாதுகாவலன் கதாபாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் ராம் சரண். காதல், தந்தைக்கு கொடுத்த சத்தியம், லட்சியம் என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.

பிற்பாதியில் வரும் அஜய் தேவ்கன் போராளியாக மனதில் நிற்கிறார். ராம் சரணின் காதலியாக ஆலியா பட், மாமாவாக சமுத்திரக்கனி, அஜய் தேவ்கனின் மனைவியாக ஸ்ரேயா வந்து தத்தமக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முக்கியமான இருவேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள், போராளிகளாவதற்குமுன் நண்பர்களாக வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற தன் கற்பனையை கதைக்கரு ஆக்கி பிரமாண்டமான திரைப்படம் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இரண்டு நாயகர்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளித்து இருவரது ரசிகர்களையும் அவர் திருப்திப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

ஆக்சன் காட்சிகள் அத்தனையும் படத்திற்கு மிகப் பெரிய பலம். கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், விஷுவல் எஃபெக்ட்களும் ஜாலம் செய்துள்ளன. கீரவாணி இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிப்புக்கு உரியவை.

’ஆர்.ஆர்.ஆர்’ – ராஜமௌலியின் இன்னொரு மேஜிக்! கண்டு களிக்கலாம்!!