புகழ் – விமர்சனம்

நாயகன் ஜெய்யின் மாமா (கவிஞர் பிறைசூடன்) ஒரு கம்யூனிஸ்ட். தோள் சிவப்புத் துண்டு அவரது ஒரு அடையாளம். “உண்டியல் குலுக்கியே கட்சியை வளர்த்துடலாம்னு பாக்குறாங்க” என்ற ஏளனம் அவரது மற்றொரு அடையாளம்.

தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்று தன் அப்பா, மாமா வளர்ப்பில் வளர்ந்தவர் ஜெய். சிறு வயதிலிருந்தே தன் ஊரில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் ஓடியாடி விளையாடி, தன் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கிறார்.

கல்வி அமைச்சர் அந்த ஊரில் உள்ள நகரசபை சேர்மன் (மாரிமுத்து) உதவியுடன் அந்த விளையாட்டு மைதானத்தை அபகரித்து ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஜெய் அதை கடுமையாக எதிர்க்கிறார். “அது நாங்கள் வாழ்ந்து, விளையாடிவரும் மைதானம்” என கங்கணம் கட்டி போராடுகிறார்.

தன் விரலை வைத்து தன் கண்களையே குத்துவது போல், ஜெய்யின் நண்பருக்கு அரசியல் ஆசைகாட்டி, கவுன்சிலர் ஆக்கி, அவரின் பணத்தேவையை பூர்த்தி செய்து, அந்த மைதானத்தை வளைத்துப் பிடிக்க பார்க்கிறார் சேர்மன்.

ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அந்த மைதானத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஜெய், இத்தனை பெரிய அரசியல் சதியையும், செல்வாக்கையும் தாண்டி வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

ஏற்கனவே இதே சாயலில் மெட்ராஸ், அஞ்சல போன்ற படங்கள் வந்திருக்கின்றன. என்றாலும், 100 காதல் கதைகள் வந்தாலும் நாம் பார்க்கத் தானே செய்கிறோம். அந்த வகையில் இதுபோல் நல்ல கருத்துக்களை கொண்ட படங்கள் ஒரே சாயலில் வந்தாலும் பார்ப்பதற்கு என்ன? என்று தான் தோன்றுகிறது.

ஜெய்க்கு அவரது திரைப்பயணத்திலேயே இது பெஸ்ட் கதாபாத்திரம் என்று கூறலாம். புகழ் என்ற பெயரில் கோபக்கார இளைஞனாக வருகிறார். ஊரில் எந்த அநியாயம் நடந்தாலும் எதிர்த்து போராடும் குணமுடையவராகவும், “உன்னை கொலை செய்ய முயற்சித்தவன் உன் நண்பன் தான்” என பலர் சொல்லியும் கேட்காமல் நட்பிற்கு மரியாதை கொடுக்கும் இடத்திலும் செம்ம ஸ்கோர் செய்கிறார்.

சுரபி படத்திற்கு எந்த விதத்தில் தேவைப்படுகிறார் என்று தெரியவில்லை. பல காட்சிகளில் ஒட்டாமல் ஏதோ காதல் காட்சிகள் தேவை என்பதற்காக வந்து செல்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி, தனது வழக்கமான ‘கடி’ காமெடியை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு, எமோஷனலாக நடிக்க முயற்சி செய்துள்ளார். அவர் அடிக்கும் கமெண்டுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன..

ஒரு தவறு நடந்தால் கண்டிப்பாக இளைஞர்கள் தட்டிக் கேட்க வேண்டும், எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் அவனை தைரியமாக எதிர்த்து போராட வேண்டும் என்ற  கதைக்கருவைத் தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் மணிமாறனை பாராட்டலாம்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் தெளிவாகப் படம் பிடித்து அசத்துகிறது. விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை, என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் அரசியல் குறித்து வந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மட்டுமின்றி ஒரு அரசியல் பிரமுகர் தவறு செய்தால் தட்டியும் கேட்க வேண்டும் என துணிந்து சொல்லும் இப்படத்தை வரவேற்கலாம்.

‘புகழ்’ – புகழுக்கு உரியது!