சத்யா – விமர்சனம்

கடந்த ஆண்டு துவக்கத்தில் தெலுங்கில் ரவிகாந்த் பெரெபு இயக்கத்தில் வெளியான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக். க்ஷணம், தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது. ஆகையால், திரைக்கதையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே ரீ மேக் செய்திருக்கிறார்கள்.

தன் குழந்தை கடத்தப்பட்டதாக பெண் ஒருவர் சொல்ல, விசாரிக்கும்போது அப்படி ஒரு குழந்தையே இல்லை என்கிறார்கள் எல்லோரும். உண்மையில் அப்படி ஒரு குழந்தை இருந்ததா என்ற முடிச்சை மையமாக வைத்தை விரிகிறது கதை.

சிட்னியில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும் சத்யாவுக்கு (சிபிராஜ்) அவனது முன்னாள் காதலி ஸ்வேதாவிடமிருந்து (ரம்யா நம்பீசன்) தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. தன் குழந்தை கடத்தப்பட்டு விட்டதாகவும் அதை மீட்டுத்தர வேண்டுமென்றும் கேட்கிறாள். இந்தியாவுக்குத் திரும்பும் சத்யா, அந்தக் குழந்தை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும்போது அப்படி ஒரு குழந்தையே இல்லையென பலரும் சொல்கிறார்கள். காவல்துறையும் அதையே சொல்கிறது. ஆனால், தனக்கு ஒரு குழந்தை இருந்ததாக வலியுறுத்திச் சொல்கிறாள் ஸ்வேதா. உண்மையில் குழந்தை இருந்ததா, இருந்திருந்தால், உண்மையில் கடத்தப்பட்டதா என்பதை சத்யா கண்டுபிடிப்பதே மீதிக் கதை.

ஒரு நான் – லீனியர் திரைக்கதையை எடுத்துப் படமாக்கும்போது, கொஞ்சம் சொதப்பினாலும் படம் புரியாமல் போய்விடும் அபாயம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், மிகக் கச்சிதமாக படத்தின் கடைசிக் காட்சிவரை இந்த ‘நான் – லீனியர்’ அம்சத்தைக் குழப்பமில்லாமல் கையாண்டுகொண்டே போகிறார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

இந்தக் கதையின் பிரதானமான முடிச்சுகள் இரண்டு. முதலாவது முடிச்சு, உண்மையில் குழந்தை இருந்ததா, இல்லையா என்பது. இரண்டாவது, அப்படி குழந்தை இருந்திருந்தால் அதை யார், எதற்காகக் கடத்தியிருக்கக்கூடும் என்பது.

இதில், குழந்தை இருந்ததா, இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைத்தால்தான் குழந்தையை யார் கடத்தியது என்ற புதிரையே அவிழ்க்க முடியும். இருந்தும், முதல் புதிரைத் தீர்க்க கதாநாயகன் போராடிக்கொண்டிருக்கும்போதே, இரண்டாவது புதிரும் அவிழ ஆரம்பிப்பது அட்டகாசம். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை ஒரே வேகத்தில் செல்வது படத்தில் பலங்களில் ஒன்று.

சிபிராஜின் திரைவாழ்வில் இந்தப் படம் முக்கியத் திருப்புமுனையாக இருக்கும். திரைக்கதைதான் படத்தின் ஹீரோ என்பதால், ரொம்பவும் அடக்கிவாசித்திருக்கும் சிபிராஜ், மிகவும் கவர்கிறார்.

ஒரு காட்சியில், படத்தில் நகைச்சுவை நடிகராக வரும் யோகி பாபுவிடம் சிபிராஜ் ரொம்பவும் சீரியஸாக, ‘நான் அப்படிப்பட்டவன் இல்லை. எனக்கு நடிக்கவெல்லாம் வராது’ என்கிறார். யோகிபாபுவும் சீரியஸாக, ‘உனக்கு நடிக்க வராதுங்கிறதுதான் எல்லாத்துக்கும் தெரியுமே’ என்கிறார். பஞ்ச் வசன ஹீரோக்களின் காலத்தில், இப்படி ஒரு காட்சி படத்தில் வருவது ஆறுதலாக இருக்கிறது.

குழந்தையைத் தேடும் தாயாக வரும் ரம்யா நம்பீசன், காவல்துறை அதிகாரியாக வரும் ஆனந்த் ராஜ், போதைப்பொருள் கடத்தல்காரனாக வரும் சதீஷ் ஆகியோருக்கும் இது முக்கியமான படம்.

யவ்வனா’ பாடலின் மூலம் ஏற்கனவே கவனத்தைக் கவர்ந்துவிட்ட இசையமைப்பாளர் சிமோன், பின்னணி இசையிலும் ரசிக்கவைக்கிறார்.

 

Read previous post:
0a1d
கொடிவீரன் – விமர்சனம்

தங்கைகளின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அண்ணன்களின் கதையே 'கொடிவீரன்'. சாமியாடியாக வரும் கொடிவீரன் (சசிகுமார்) மக்களுக்கு அருள்வாக்கு சொல்பவராக இருப்பதால் அவரை குலசாமியாக ஊரே

Close