கொடிவீரன் – விமர்சனம்

தங்கைகளின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அண்ணன்களின் கதையே ‘கொடிவீரன்’.

சாமியாடியாக வரும் கொடிவீரன் (சசிகுமார்) மக்களுக்கு அருள்வாக்கு சொல்பவராக இருப்பதால் அவரை குலசாமியாக ஊரே கொண்டாடுகிறது. கொடிவீரனுக்கு தங்கை பார்வதிதான் (சனுஷா) உலகம். நல்ல இடத்தில் தங்கையைத் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார். பார்வதியின் மணமாலையால் கொடிவீரனுக்கு ஆபத்து வரும் என்றும் அவரே அருள்வாக்கு சொல்கிறார். இந்நிலையில் வழக்கறிஞராக பணிபுரியும் இளைஞரை (பிரேம்) தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப் போக, அங்கு வரும் வில்லங்க வெள்ளைக்காரனை (பசுபதி) யதேச்சையாகப் பார்க்கிறார் கொடிவீரன். அவரின் குற்றச்செயல்கள் கண்டு மனம் பதைக்கிறார். இடையே மலரைக் (மஹிமா) கண்டதும் காதல் வயப்படுகிறார். வழக்கறிஞர் மாப்பிள்ளை வேண்டாம் என்ற முடிவில், கோட்டாட்சியர் சுபாஷ் சந்திரபோஸை (விதார்த்) மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் சந்திக்கச் செல்லும் போதும் அங்கு வில்லங்க வெள்ளைக்காரன் வந்து இடையூறு செய்கிறார். வில்லங்க வெள்ளைக்காரன் ஏன் வழக்கறிஞரையும், கோட்டாட்சியரையும் மிரட்டுகிறார், கொடிவீரன் தன் தங்கைக்கு யாரை மாப்பிள்ளையாக, எப்படித் தேர்ந்தெடுக்கிறார், தங்கையின் திருமணத்தின் போதும், அதற்குப் பிறகும் நிகழும் ஆபத்துகள் என்னென்ன, அதை யார் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது மீதிக் கதை.

அம்மா பாசம், மாமனார் பாசம், பாட்டி பாசம் என முந்தைய படங்களில் பாசத்தைப் பட்டியலிட்ட இயக்குநர் முத்தையா இப்போது அண்ணன் – தங்கை பாசத்தைக் கொட்டியிருக்கிறார். அதிலும் அண்ணன் – தங்கைகளின் பாசம் யாரை என்னவாக மாற்றுகிறது என்பதையும் இயக்குநர் சொல்லத் தவறவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வு முறையை வீடுகளின் அமைப்பில் ஆரம்பித்து திருமணச் சடங்குகள், மரண வீட்டின் செய்முறைகள், இறை வழிபாடு என அத்தனை அம்சங்களையும் பக்குவமாகப் பதிவு செய்திருக்கிறார். கதாபாத்திரங்கள், வசனங்கள், திரைக்கதை அமைப்பு என எல்லாவற்றிலும் முந்தைய படங்களின் சாயல் ஓரளவு தெரிந்தாலும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நம்மைத் தூண்டும் அளவுக்கு ரசிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெறுகிறார்.

தங்கைக்கு சொல்லும் அருள் வாக்கு மூலமே கதையின் நோக்கத்தை மிகச் சரியாக சொல்லிவிடுகிறார் இயக்குநர். ஆனால், அந்த நோக்கத்தை அடைய பயணம் செய்யும் வழிகளில்தான் அத்தனை தடைகள். ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவன் செய்த துரோகத்துக்காக ஒற்றை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் போது குழந்தை பிறக்கிறது. பார்க்கவே குலை நடுங்கிப் போகும் இந்தக் காட்சி எப்படி தணிக்கையில் தப்பித்தது என்ற அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

ஊருக்கே அருள்வாக்கு சொல்லும் கொடிவீரனாகவும், பாசக்காரனாகவும் சசிகுமார் பாஸ்மார்க் வாங்குகிறார். தங்கையின் வாழ்க்கை நிம்மதியோடு இருக்க வேண்டும் என்பதற்காகவும், மச்சானின் ஆயுசு நிலைபெற வேண்டும் என்பதற்காகவும் தவிக்கும் தவிப்பில் லைக்ஸ் வாங்குகிறார். நடனக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் சசி சோபிக்கவில்லை என்பதை சொல்லியே ஆக வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் அவர் பேசும் வசனங்களும் எடுபடவில்லை. ஆனால், எதிராளிக்கு சவால் விடும் கோபாவேசமும், தங்கைக்கு துன்பம் நேராக்கூடாது என்று எடுக்கும் முயற்சிகளும் பலன் அளிக்கின்றன.

சனுஷா பாசமுள்ள தங்கையாக சிரித்த முகமாக வலம் வருகிறார். அண்ணன் புகழ்பாடியாக தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்கிறார். மஹிமா நம்பியாருக்கு சசிகுமாரைக் காதலிப்பதுதான் வேலை. அதை செவ்வனே செய்கிறார்.

பூர்ணா.. அண்ணன் மீதான பாசத்தையும், கர்வத்தையும் சரியாகப் பிரதிபலிக்கிறார். அண்ணனின் சிறைவாசத்துக்குப் பிறகு நேர்ந்துவிட்ட கடாவை பலி கொடுக்கும் போது கண்களில் காட்டும் பெருமை, புன்னகையும் பூரிப்புமாக முடியை இழக்கும் கம்பீரம், கணவனை இழந்தபின் காட்டும் வைராக்கியம் என நடிப்பில் அட போட வைக்கிறார். பன்ச் வசனம் பேசி நாயகன் துதிபாடுவது, பேசிப் பேசியே வில்லத்தனம் செய்வது என வழக்கமும் பழக்கமுமான வேலைதான் பசுபதிக்கு. அதை கொஞ்சம் சரியாகவும், முறையாகவும் செய்கிறார்.

படத்தில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர் விதார்த் தான். தன் கச்சிதமான நடிப்பால் படத்துக்கு இன்னொரு பரிமாணம் கொடுக்கிறார். இவரைச் சுற்றியே கதை நகர்கிறது. விக்ரம் சுகுமாறன் முரடனாக நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் வேறுபட்டு நீட்டிக்கப்படாமல் அளவாக வைத்திருப்பது அழகு.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவிலும், ரகுநந்தனின் இசையிலும் நேர்த்தி தெரிகிறது. வெங்கட்ராஜன் இன்னும் சில இடங்களில் கத்தரி போடுவதில் தாராளம் காட்டியிருக்கலாம்.

”எங்க அண்ணன் ஒருத்தனை அறுக்குறதுக்கு முன்னாடி, ஆயிரம் தடவை யோசிக்கும்…ஆனா, அறுக்கும்போது யோசிக்காது”, ”எங்க அண்ணன் எவன் எதுக்க வர்றவன் இல்லை, எவனையும் எதிர்க்க வர்றவன்”, ”அநியாயம் நடக்குற இடத்துக்கு கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்”, ”நீங்க நினைச்சா ஒண்ணும் சரிக்க அவன் ஆயிரத்துல ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேர் சேர்ந்த ஒருத்தன்”, ”இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே”, ”நான் ஒருத்தனை போடுறதுக்கு அருவாளை தூக்குனேன்னா முதல்ல பதட்டத்தைக் காட்டுவேன் அடுத்து பயத்தைக் காட்டுவேன் அதுக்கப்புறம்தான் என் பலத்தைக் காட்டுவேன்”, ”இந்த ஊரு நான் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சும் பாத்திருக்கு, நார் நாரா பிரிச்சுப் பார்த்ததில்லையே”, ”நீ எமன்னா நான் சிவன்” ரைமிங் வார்த்தைகள் போட்டு படம் முழுக்க இருக்கும் பஞ்ச் வசனங்கள் இருக்கிறது என்று மேலோட்டமாகத் தெரியும். கூர்ந்து கவனித்தால் அதிலும் தெறிக்கிறது வன்மம்.

‘குட்டிப்புலி’ சசிகுமாருக்கும், ‘கொடிவீரன்’ சசிகுமாருக்கும் தோற்றத்தில், நடை, உடை, பாவனையில் பெரிய வித்தியாசமில்லை. ஒரு கோட்டாட்சியர் நண்பன் கொலைக்குப் பிறகும், பகைக்குக் காரணமானவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பாரா, தனக்கு மிரட்டல் கொடுக்கப்பட்ட பிறகும் காவல்துறையை நாடாமல் தானாகத் தீர்த்துக்கொள்ளப் பார்ப்பாரா, தன் மாமனால் அத்தனை பெரிய வன்முறை கண்முன் நடந்தும் எப்படி அமைதி காப்பார், சசிகுமார் அப்பா என்ன ஆனார், பசுபதிக்கு எப்போது எப்படி திருமணம் நடந்தது என பல கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. தாலி அறுப்பு சடங்குகள், அது சம்பந்தமான காட்சிகள், வசனங்கள் என ஏன் இவ்வளவு விவரணைகள்? பகைக்குக் காரணமான நபரையே மன்னிக்கும் நாயகன் அடியாட்களை மட்டும் ஆக்ரோஷத்துடன் குத்தி வீழ்த்துவதில் லாஜிக் இல்லை. ஸ்லோமோஷன் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைத் தவிர்த்து, புத்திசாலித்தனமான வியூகங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் தென்மாவட்டங்களின் நிகழ்கால கலாச்சாரத்தைப் பதிவுசெய்த விதத்தில் ‘கொடிவீரன்’ முரட்டு வீரனாக முகம் காட்டுகிறார்.

Read previous post:
0a1g
“தனுஷூக்கு பக்கத்தில் கடவுள் எனக்கொரு இடம் கொடுத்திருக்கிறார்!” – சிம்பு

“தனுஷ் மீது நடிப்பு என்றதொரு பாரத்தை திடீரென்று போட்டார்கள். அதை இறக்கி வைக்காமல், தொடர்ச்சியாக அவர் போராடி வருகிறார். அவருக்கு பக்கத்தில் கடவுள் எனக்கொரு இடம் கொடுத்திருக்கிறார்

Close