இயக்குனர் பா.ரஞ்சித்திடம் விஜய் கதை கேட்டாரா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கபாலி’. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரலாறு காணாத அளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறது.

‘கபாலி’ படத்துக்கு முன்பு விஜய் நடித்த ‘தெறி’ படத்தை தயாரித்தார் தாணு. விஜய்க்கு மிகவும் நெருக்கமானவரான தாணு, பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும், அதில் விஜய் நடிக்க இருப்பதாகவும், இதற்காக பா.ரஞ்சித்தை அழைத்து விஜய் கதை கேட்டதாகவும், பா.ரஞ்சித் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இத்தகவல்கள் குறித்து விஜய் தரப்பில் கேட்டபோது, “பரதன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் விஜய். பல இயக்குனர்கள் விஜய்யிடம் கதை கூற விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், படப்பிடிப்பு இருக்கும்போது விஜய் யாரிடமும் கதை கேட்க மாட்டார். இன்னும் பரதன் படத்தின் படப்பிடிப்பு பணிகளே நிறைய இருக்கும் சூழலில், அவர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கவில்லை. பா.ரஞ்சித் மட்டுமல்ல, எந்தொரு இயக்குனரிடமும் விஜய் இன்னும் கதை கேட்கவில்லை” என்று தெரிவித்தார்கள்.

தற்போது பரதன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் வில்லன்களுடன் விஜய் மோதும் ஒரு முக்கியமான சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறது படக்குழு.