விருமன் – விமர்சனம்

நடிப்பு: கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர்

இயக்கம்: முத்தையா

தயாரிப்பு: ’2டி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் சூர்யா

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: செல்வகுமார்

’தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்போராட்டம்’ என்ற கதைக்கருவை உள்ளடக்கிய திரைப்படங்கள் தமிழில் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவற்றிலிருந்து மாறுபட்டு, ‘தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான கோபாவேசப் போராட்டம்’ என்ற வித்தியாசமான, ஆர்வத்தைத் தூண்டும் கதைக்கருவைக் கொண்ட திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, கிராமிய மணத்துடன் கூடிய ‘விருமன்’.

தாசில்தாராக இருப்பவர் முனியாண்டி (பிரகாஷ்ராஜ்). இவருடைய மனைவி முத்துலட்சுமி (சரண்யா பொன்வண்ணன்). இவர்களுக்கு நான்கு மகன்கள். அவர்களில் நான்காவது மகன் தான் விருமன் (கார்த்தி).

கணவர் முனியாண்டி வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் முத்துலட்சுமி. அம்மாவின் இறப்புக்கு அப்பா தான் காரணம் என்பதை அறிந்த விருமன், அப்பாவுடன் இருக்காமல், தனது தாய்மாமாவான குஸ்தி வாத்தியார் (ராஜ்கிரண்) பராமரிப்பில் வளர்ந்து வருகிறான்.

 வளர்ந்து பெரியவனான பிறகு, அம்மாவின் இறப்புக்குக் காரணமான அப்பாவை பழிதீர்க்க விருமன் போராடுவதும், அவனது அம்மா பெயரிலிருக்கும் சொத்துக்களை அவனிடமிருந்து அபகரிக்க அப்பா முனியாண்டி போராடுவதுமாக ‘தந்தை – மகன் கோபாவேசப் போராட்டம்’ உக்கிரமாக நடக்கிறது. இதனால் இவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அப்பாவை பழி தீர்க்கும் முயற்சியில் விருமன் வெற்றி பெற்றானா? அல்லது அவனிடமிருந்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் முனியாண்டி வெற்றி பெற்றாரா? அல்லது அப்பா – மகன் இருவருமே கோபதாபங்களை கைவிட்டு இணைந்தார்களா? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது படத்தின் மீதிக்கதை.

0a1a

விருமனாக வரும் கார்த்திக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி. ‘பருத்திவீரன்’, ‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களில் பட்டையைக் கிளப்பிய கார்த்தி, இந்த படத்திலும் தூள் கிளப்பியிருக்கிறார். கிராமிய மணம் மாறாமல் நையாண்டி, நடனம், ஆக்சன், செண்டிமெண்ட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அவரது நடிப்பு மிகப் பெரிய தூணாக இருந்து முழுப்படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறது.

விருமனின் ஜோடி தேன்மொழியாக வருகிறார் அதிதி ஷங்கர். அவருக்கு இது முதல் படம் என்ற எண்ணம் தோன்றாத அளவுக்கு தன்னால் இயன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறும்பாக நடிப்பதிலும், குத்தாட்டம் போடுவதிலும் தேறியிருக்கிறார். என்றாலும், இன்னும்கூட நடிப்புப்பயிற்சி பெற்றுக்கொள்வது நல்லது.

விருமனின் அப்பா தாசில்தார் முனியாண்டியாக வரும் பிரகாஷ்ராஜ், பார்வையாளர்களுக்கே கோபம் வரும் அளவுக்கு பயங்கரமாக வில்லத்தனம் செய்திருக்கிறார். சூரி, சிங்கம்புலி காமெடிகள் கதையின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கின்றன. ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட ஏனையோரும் அவரவர் கதாபாத்திரங்களை சிறப்பாகச் செய்துள்ளனர்.

தென்தமிழ்நாட்டு பாரம்பரியத்தை திரையில் சிறப்பாக சொல்லும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் முத்தையா என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார். குடும்பம், அது தொடர்பான உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று கதை சொல்லி, நம்மை அதில் ஈடுபாடுகொள்ள வைத்து லயிக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் படத்துக்குப் படம் ஏறக்குறைய ஒரே மாதிரி கதை, ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் என்ற சலிப்பு ஆங்காங்கே ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

யுவன் சங்கர் ராஜாவின் அனைத்துப்பாடல்களும் அருமை. ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கின்றன. பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு உறுதுணையாக இருப்பது சிறப்பு.

செல்வகுமாரின் காமிரா, மதுரையின் சுற்றுவட்டார கிராமிய மணம் மாறாத அழகை, இயல்பை அள்ளிப் பருகியிருக்கிறது.

‘விருமன்’ – குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!