சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – விமர்சனம்

நடிப்பு: சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, கேபிஒய்.பாலா, மா.கா.பா.ஆனந்த், திவ்யா கணேஷ், ஷாரா, பகவதி பெருமாள் மற்றும் பலர்

இயக்கம்: விக்னேஷ் ஷா

ஒளிப்பதிவு: ஆர்தர் ஏ.வில்சன்

இசை: லியோன் ஜேம்ஸ்

தயாரிப்பு: ’லார்க் ஸ்டூடியோஸ்’ கே.குமார்

வெளியீடு: ’11:11 புரொடக்சன்ஸ்’ டாக்டர் பிரபு திலக்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேஷன்ஸ்)

’செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) எனும் அதிநவீன தொழில் நுட்பத்தை மையமாக வைத்து முழுநீள நகைச்சுவைப் படமாக கற்பனையாகப் புனையப்பட்டுள்ளது, ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற அறிவியல் புனைவு (Science Fiction) திரைப்படம்.

முரட்டு சிங்கிளாக இருக்கும் விஞ்ஞானி ஒருவர் (ஷாரா), தன்னைப் போல் திருமணம் செய்துகொள்ளாமலும், காதலிக்க பெண் கிடைக்காமலும் தவிக்கும் ஆண்களின் தனிமையைப் போக்குவதற்காக, பல கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சிகள் செய்து, மனிதர்களுடன் பெண் குரலில் பேசிப் பழகக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அந்த ஸ்மார்ட்போனின் பெயர் தான் ’சிம்ரன்’.

ஸ்மார்ட்போன் சிம்ரனை உருவாக்குவதற்குத் தேவையான பணம் முதலீடு செய்த தொழிலதிபர் பகவதி பெருமாள், அதை சந்தையில் பல கோடிகளுக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக, செல்போன் திருடர்களான கேபிஒய்.பாலாவும் அவரது நண்பரும் அந்த ஸ்மார்ட்போன் சிம்ரனை திருடிக்கொண்டு தப்பியோடி, அதன் மகிமை தெரியாமல், செல்போன் கடை ஒன்றில் வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டுப் போகிறார்கள்.

இதனிடையே, பொறியியல் படிப்பு படித்துவிட்டு உணவு டெலிவரி பாயாகவும், முரட்டு சிங்கிளாகவும் இருக்கும் நாயகன் சிவாவின் (படத்தில் இவர் பெயர் தான் ஷங்கர்) செல்போன் உடைந்துவிட, செகண்டு ஹேண்ட் செல்போன் ஒன்று வாங்குவதற்காக அதே செல்போன் கடைக்கு வருகிறார். அவரிடம் வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் சிம்ரனை விற்றுவிடுகிறார் கடைக்காரர்.

0a1f

சிவாவின் கைக்கு வந்த ஸ்மார்ட்போன் சிம்ரன், சிவாவின் வாழ்க்கையை பணக்காரத்தனமானதாகவும், ஆடம்பரமானதாகவும் மாற்றியமைத்து உற்சாகமூட்டுகிறது. அதேநேரத்தில் பெண் உணர்வு உள்ள ஸ்மார்ட்போன் சிம்ரனுக்கு சிவா மீது காதல் ஏற்படுகிறது. அந்த காதலை ஏற்க மறுக்கும் சிவா, ”வெறும் செல்போனாக இருக்கும் உன்னுடன் வாழ முடியாது” என்று நிராகரித்துவிட்டு, வேறொரு பெண்ணை (அஞ்சு குரியனை) காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். இதன்பின், ஸ்மார்ட்போன்  சிம்ரனுடனான நெருக்கத்தை சிவா குறைத்துக்கொள்கிறார். இதனால் ஆத்திரமடையும் ஸ்மார்ட்போன் சிம்ரன், சிவாவுக்கு எதிராக சதி செய்து செயல்பட, பல பிரச்சனைகளில் சிவா சிக்கித் தவிக்கிறார். இவற்றிலிருந்து சிவா மீண்டாரா? அவரை ஒருதலையாய் காதலித்த ஸ்மார்ட்போன் சிம்ரன் இறுதியில் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஆரம்பத்திலேயே, “லாஜிக் பார்க்க வேண்டாம்” என்று கேட்டுக்கொள்வதால், லாஜிக் மீறல்களை பார்வையாளர்கள் ஒதுக்கி வைத்துவிட்டு, எல்லாவற்றையும் நகைச்சுவையாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நாயகன் ‘சிங்கிள் ஷங்கராக’ வரும் சிவா, வழக்கம்‌போல தனக்கு என்ன வருமோ அதனை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இயல்பாகவே வரும் டைமிங் காமெடிகளும், உடல்மொழியும் மொத்த படத்தையும் ரசிக்க பேருதவி புரிகின்றன.

ஸ்மார்ட்போன் சிம்ரனின் உருவமாக வரும் மேகா ஆகாஷ், தன் பாத்திரம் உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். அவரது சின்னச் சென்ன முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது.

நாயகனின் காதலியாக அஞ்சு குரியன் வந்து போகிறார். ஷாரா, பகவதி பெருமாள், மா.கா.பா.ஆனந்த், திவ்யா கணேஷ், பாடகர் மனோ, கேபிஒய்.பாலா உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு  கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.

நம்ப முடியாத கதை என்றாலும் திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதாலும் காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளதாலும் படத்தை ரசிக்கும்படி எடுத்து பாராட்டு பெறுகிறார் அறிமுக  இயக்குனர் விக்னேஷ் ஷா. இதுபோல் தரமான, ஆபாசமில்லாத, நல்ல நகைச்சுவை படங்களை எதிர்காலத்திலும் இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

ஆர்தர் ஏ.வில்சனின் அருமையான ஒளிப்பதிவு, பெரிய பட்ஜெட் படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. லியோன் ஜேம்ஸின் இசையில் ‘ஸ்மார்ட்போன் சென்யோரிட்டா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.

 ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ – பார்த்து, சிரித்து, மகிழத் தக்க படம்!