வட்டிக்கடன் கொடுமை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை மகன் ஆவார்.

சசிகுமார் நடத்தும் ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராக அசோக்குமார் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்த அசோக்குமாருக்கு நேற்று காலை ஊழியர் ஒருவர் போன் செய்துள்ளார். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டிற்குள் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் அசோக்குமார் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரது வீட்டில் சோதனை செய்தபோது அசோக்குமார் எழுதிய 2 பக்க உருக்கமான கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில், வட்டிக்கு கடன் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்புசெழியனின் தொல்லையால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி உள்ளார்

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:–

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தான். எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தி உள்ளேன். சசிகுமாருக்கு நல்லது மட்டுமே செய்ய தெரியும். ஆனால் அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை 10 ஆண்டுகளில் எங்களது எல்லா தயாரிப்பு படங்களையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம் சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் கடன் வாங்கியது தான். வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த 7 வருடங்களுக்கு மேல் வாங்கியவர் கடந்த 6 மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடக்க ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்து கொண்டு என் வீட்டு பெண்கள், பெரியவர்கள் எல்லாரையும் தூக்கி விடுவேன் என்றார். அவர்களிடம் இருந்து சசிகுமாரை மீட்பதற்கு திராணி இல்லாததால் தான் என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு நடிகர் சசிகுமார், இயக்குனர்கள் சமுத்திரகனி, கரு.பழனியப்பன், பாலா, அமீர் ஆகியோர் வந்தனர். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதன்பேரில் பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சசிகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது நிழலாக இருந்தவர் அசோக்குமார். என்னுடைய படம், பணம் அனைத்தையும் அவர் பார்த்து வந்தார். இப்போது படம் ரிலீஸ் ஆகும் நேரம் பணப்பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்று தெரிவித்தார்.

இயக்குனர் அமீர் கூறியதாவது:–

கடன்தொல்லையால் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினர் இனியும் இதனை சரி செய்யவில்லை என்றால் சினிமா துறையை இழுத்து மூடி விட்டு எங்காவது சென்று விட வேண்டும். பாதிக்கப்பட்ட யாரும் வாய் திறந்து பேசுவது இல்லை. சினிமாவில் மட்டும் வீர வசனம் பேசுகின்றனர்.

வட்டிக்கு மேல் வட்டி, திரைப்பட ரிலீஸ் தேதியையும் நிறுத்தி வைத்தால் என்ன செய்ய முடியும்?. இந்த பிரச்சினை குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிர்வாகிகளாக இருப்பதற்கே தகுதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.