குடியரசு தலைவர் தேர்தல்: ஆரியத்துவவாதி ராம்நாத் கோவிந்த் வெற்றி!

இந்திய ஒன்றிய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ஆரியத்துவவாதி ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒன்றியத்தின் 15-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், ஆரியத்துவ அரசியல் கோட்பாடு கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸில் அங்கம் வகிக்கும் ராம்நாத் கோவிந்த் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீராகுமார் நிறுத்தப்பட்டார்.

இந்த தேர்தலில் 4,896 எம்.பிக்கள் – எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

மொத்தம் உள்ள 10லட்சத்து 98ஆயிரத்து 882 வாக்குகளில், ராம்நாத் கோவிந்த் 7லட்சத்து 2ஆயிரத்து 44 வாக்குகளும், மீரா குமார் 3லட்சத்து 67ஆயிரத்து 314 வாக்குகளும் பெற்றனர். அதாவது, மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீரா குமார் 34 சதவீதமும் பெற்றுள்ளனர். 21 எம்.பிக்க்கள்,  77 எம் எல்ஏ.க்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் (ஜூலை) 25ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என தெரிகிறது.