“எனக்கு பிடித்த படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள்”: கமல் மகிழ்ச்சி!

“எனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்களான ‘த ரெவனன்ட்’, ‘மேட் மேக்ஸ்’ ஆகியவற்றுக்கு மிகச் சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன” என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்’ எனப்படும் யு.எஸ்.ஏ.வின் ஹாலிவுட் திரையுலகில் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ‘ஆஸ்கர் விருதுகள்’ வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் 88-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், ‘தி ரெவனன்ட்’ படத்தில் நடித்த லியானர்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் ‘ஜாக்’ என்ற நாயக பாத்திரத்தில்  நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லியானர்டோ டிகாப்ரியோ, சிறந்த நடிகருக்கான பட்டியலில் இதுவரை 4 முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போதுதான் அவர் முதல்முறையாக ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

இன்று அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளில் ‘மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு’ என்ற திரைப்படம் சிறந்த எடிட்டிங், சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம், சிறந்த ஆடை வடிமைப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த தயாரிப்பு வடிமைப்பு என 6 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

‘தி ரெவனன்ட்’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் என 3 ஆஸ்கர் விருதுகளும், ‘ஸ்பாட்லைட்’ படத்துக்கு சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த படம் என 2 விருதுகளும் கிடைத்துள்ளன.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கர் விருதுகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், “எனக்கு மிகவும் பிடித்த ‘தி ரெவனன்ட்’, ‘மேட்மேக்ஸ்’ ஆகிய 2 படங்களுக்கும் மிகச் சரியான காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

“பிரியங்கா சோப்ரா மிகவும் அழகாகவும் நம்பிக்கையுடனும் உள்ளார்.

“எனக்கு விருப்பமான நடிகர்கள் பட்டியலில் டாம் ஹார்டி உள்ளார். ஆனால் இந்தமுறை அவருக்கு விருது கிடைக்கவில்லை. ‘பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்’ படத்தில் நடித்த மார்க் ரைலான்ஸும் சிறப்பாகவே நடித்தார்” என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

88-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற படைப்புகள் மற்றும் கலைஞர்கள் விவரம் வருமாறு:

*சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்

* சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்

* சிறந்த உறுதுணை நடிகை- அலிசியா விகாண்ட (தி டேனிஷ் கேர்ள் திரைப்படத்துக்காக.)

* சிறந்த ஆடை வடிமைப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு – மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அகங்காரம்- மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு

* சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி (தி ரெவனன்ட்) ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)

* சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒலித்தொகுப்பு – மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒலிக்கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் (எக்ஸ் மாகினா)

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – இன்ஸைட் அவுட்

* சிறந்த உறுதுணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் (பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்)

சிறந்த குறும்படம் (ஆவணப்பட பிரிவு) – எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

* சிறந்த ஆவணப்படம் – ஏமி (படத்தின் இயக்குநர்: ஆசிப் கபாடியா)

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ஸ்டட்டரர்

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் – சன் ஆஃப் சால் (ஹங்கேரி)

* சிறந்த இசை – எனியோ மோரிகானே (தி ஹேட்ஃபுல் எய்ட்)

* சிறந்த பாடல் – ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் (ஸ்பெக்டர்)

* சிறந்த இயக்குநர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து (தி ரெவனெண்ட்) (சென்ற வருடமும் இன்னாரித்து சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றார்.)

* சிறந்த நடிகை – ப்ரீ லார்சன் (ரூம்’)

* சிறந்த நடிகருக்கான விருது: லியானார்டோ டி காப்ரியோ (தி ரெவனன்ட்)

* சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்