தி.மு.க. பேச்சாளர் நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார்

தனது முத்திரை சிரிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் பிரபலமான நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார். அவருக்கு வயது 78.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் ஆஞ்சியோகிராம் செய்துகொண்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கட ந்த சில தினங்களுக்குமுன் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது.

குமரிமுத்துவின் மனைவி பெயர் புண்ணியவதி. இவருக்கு செல்வபுஷ்பா, எலிபெசபெத் மேரி, கவிதா என 3 மகள்களும், ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளனர்.

குமரிமுத்து கலைமாமணி விருது பெர்றவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். மேலும், கிறிஸ்துவ ஊழியம் செய்து வந்தவர்.

மேடை நாடகங்கள் மூலமாக அறிமுகமாகி திரையுலகிற்குள் நுழைந்தவர் குமரிமுத்து. 1978ம் ஆண்டு ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஊமை விழிகள்’, ‘கை கொடுக்கும் கை’, ‘சின்ன பூவே மெல்ல பேசு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். 2009ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘வில்லு’ படத்தில் சிறு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு மேடைப் பேச்சாளராகவும் இருந்தவர் குமரிமுத்து.

இவருடைய சிரிப்பை எப்போதுமே தமிழ் திரையுலக ரசிகர்களால் மறக்கவே முடியாது. குமரிமுத்துவின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துவருகிறார்கள்.

குமரிமுத்து மறைவையொட்டி திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து அவர்கள் இன்று காலையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். ஒரு சில நாட்களுக்கு முன்புதான் குடும்பத்தினருடன் என்னை வந்து சந்தித்து, மருத்துவமனையிலிருந்து உடல்நலம் பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவியதற்காக நன்றி தெரிவித்துவிட்டும் சென்றார்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், என் பெயரால் வழங்கப்படும், கலைஞர் விருது குமரிமுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர் இவர். திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் நம்பிராஜன் அவர்களின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் தனது நாடகக்குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார். இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் “கலைமாமணி”, “கலைச்செல்வம்” ஆகிய விருதுகளைப் பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு “பெரியார் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.

குமரிமுத்துவின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.