பா.ஜ.க ஆட்சியை அகற்றுங்கள்: திரை படைப்பாளிகள் வேண்டுகோள்!

இயக்குனர்கள் வெற்றிமாறன், சனல்குமார் சசிதரண், ஆனந்த் பட்வர்தன், ஆஷிக் அபு, கோயி நயினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரை படைப்பாளிகள் ‘Save Democracy’ எனும் பெயரில் இணைந்திருக்கின்றனர். அவர்கள் www.artistuniteindia.com தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்று இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, விவசாயிகளை கண்டுகொள்ளாதது, நாட்டையே சில வியாபாரிகள் கையில் ஒப்படைத்தது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்கள் அருகி வருவது, தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது, பொய்யான தகவல்களை பரப்புவது போன்ற காரணங்களால்தான் பா.ஜ.க விற்கு எதிரான இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் சாராம்சம் கீழே:

‘கலாச்சாரம் மற்றும் புவியியல் ரீதியாய் நாம் வேறுபட்டிருந்தாலும், எப்போதும் ஒற்றுமையாய் இருந்து வந்துள்ளோம். அந்த ஒற்றுமைக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் புத்திசாலித்தனமான முடிவெடுக்காவிட்டால் பாசிசம் நம்மை கடுமையாக தாக்கும் ஆபத்து உள்ளது.

பா.ஜ.க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதனால் பசு பாதுகாப்பு வன்முறைகளையும் கும்பல் மனோபாவங்களையும் வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

லேசான எதிர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் கூட தேசத் துரோகிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர். தேசபத்தியை ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்கின்றனர். ராணுவ நடவடிக்கைகளைக் கூட தங்கள் தேர்தல் உத்தியாக பயன்படுத்தி, நாட்டை போரில் ஈடுபடுத்தும் சூழலை உருவாக்கும் அளவிற்கு இது வளர்ந்துள்ளது. இவர்களை அஞ்சாமல் எதிர்த்து நின்றதற்காக கொல்லப்பட்ட ஊடக நண்பர்களை மறந்துவிட வேண்டாம்.

இன்னொரு முறை பா.ஜ.க விற்கு வாய்ப்பு கொடுப்பது ஆபத்தான தவறாகிவிடும். அது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகும். உங்களால் முடிந்த அத்தனையையும் செய்து இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் தொடர்வதை தடுத்து, நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், பேச்சு எழுத்து சுதந்திரத்தை உறுதி செய்யும், தணிக்கைகள் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு அரசை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதுவே நமது கடைசி வாய்ப்பு’

தகவல்: The Hindu

(Shared from KARUPPU ANBARASAN)