“இணையம் வழியே உலகத் தொழிலாளரை ஒன்றுகூட்டி நம் பிரச்சினையை சொல்வோம்!”

டிசம்பர் 13, 2017.

சென்னையில் இருந்த வெரைசான் நிறுவன ஊழியர்கள் பதைபதைப்பில் இருந்தனர். அலுவலகத்துக்குள் வழக்கத்துக்கு மாறாக பவுன்சர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். பவுன்சர்களை டிஸ்கொதே பார்ட்டிகளில் பார்த்திருப்போம். மதுபோதையில் கலாட்டா செய்பவர்களை உள்ளே வந்து அலேக்காகத் தூக்கி வெளியே சென்று போட்டு விடுவார்கள். ஒரு தகவல் தொழில்நுட்பத் தொழில் நிறுவனத்தில் சுற்றிக் கொண்டிருந்தனர்.

HR Manager-ஐ சந்தித்து விட்டு ஒருவர் துவண்ட முகத்துடன் வந்து தன் மேஜைக்கு வந்தமர்கிறார். சில நிமிடங்களில் ஒரு பவுன்சர் வந்து அவர் அருகே நிற்கிறார். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் எதிர்காலம் பற்றிய அச்சத்தில் வெறித்து கணிணித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியரின் தோளில் பவுன்சரின் கனமான கை விழுந்தது. ஊழியர் அவரை நிமிர்ந்து பார்த்து பெருமூச்சு விடுகிறார். தன்னுடையப் பொருட்களை எடுத்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுகிறார் ஊழியர்.

அலுவலகத்தின் அந்தத் தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கின்றனர். அனைவரும் பவுன்சருடன் செல்லும் அந்த ஊழியரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அனைவரும் தனக்கு சம்பந்தமற்ற ஒரு விஷயம் நடப்பது போன்ற பாவனையைக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அவ்வப்போது HR-ன் அறை இருக்கும் பக்கம் அச்சம் கலந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தனர்.

Verizon நிறுவனத்தில் Lay off நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்தான் 700 பேர் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். அந்த நாளன்று 200 பேர். கிட்டத்தட்ட 1000 பேர் மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கேள்வி கேட்டவர்களுக்கு பவுன்சர்கள் வந்து நின்றனர்.

கழுத்தை விட்டு வெளியே தள்ளுவது என்பது போய் ஊழியர்களைத் தூக்கி வெளியே எறிவது என்கிற கட்டத்தைச் சூழல் அடைந்திருந்தது. அதைக் கேட்கும் தைரியம் சக ஊழியர்களிடம் பறிக்கப்பட்டிருந்தது.

நோக்கியா, Foxconn எனப் பல நிறுவனங்களில் அதற்கு முன் lay off நடத்தப்பட்டிருக்கின்றன. மூடவும் பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் ஒரே நாளில் வேலையின்றி நடுத்தெருவில் நின்றிருக்கின்றனர். கோவிட் காலத்தில் விகடன் தொடங்கி ஊடகங்கள் உட்பட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலைகளைப் பறித்தன. ஊதியங்கள் குறைக்கப்பட்டன. சில மாதங்களுக்கு ஊதியங்கள் வரக் கூடவில்லை.

காவேரி தொலைக்காட்சி ஒரு நல்ல நாளில் ஊழியர்களை அனுப்பி விட்டு கதவை மூடிக் கொண்டது. ஊழியர்கள் தங்களுக்கான பாக்கி சம்பளத்தைக் கேட்கச் சென்றால் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. உரிமையாளரின் மற்றொரு நிறுவன வாசலில் தர்ணா இருந்தனர். அந்த நிறுவனத்து ஊழியர்கள் உரிமையாளருக்கு ஆதரவாக வந்து அவர்களை விரட்டினர். சட்டம் ஒழுங்கை காப்பதாக சொல்லி காவல்துறையும் அச்சுறுத்தியது.

இவை யாவும் நிறுவனமயமாக்கப்பட்ட வேலையின் கதிகள்தாம். அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை எல்லாம் நம் சிந்தனை ரேடாருக்குள் கூட வருவதில்லை. அரசாங்கமே கடைமட்ட மற்றும் முதல் நிலை ஊழியர்கள் அனைவரையும் ஒப்பந்தத்தில் பணியமர்த்தும்போது தனியாரின் அழிச்சாட்டியத்தை அங்கு சென்று எப்படிச் சொல்லிட முடியும்?

இன்னும் புதிதாக Gig economy, App Life ரகத் தொழிலாளர்களின் நிலை இன்னும் கொடுமை. சொமேட்டா, ஓலா என வேலைகளை செய்து கொடுக்கும் வேலைகளைத் தரும் இணையவழி நிறுவனங்களை நாம் சட்டையைப் பிடித்துக் கூட கேட்க முடியாது. சரியான நேரத்துக்கு வராத உணவு, வாகனம் என எல்லா கோபத்தையும் உணவு கொண்டு வருபவர் மீதும் வாகனம் ஓட்டுபவர் மீதும்தான் கொட்டுவோம். சேவையை அளிப்பவர் சரியான நேரத்தில் வர வேண்டும் என மனிதர்களை ரோபாட்களாக பாவிக்கும் மனோபாவம் வெற்றிகரமாக நமக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒவ்வொரு மனிதனும் சேவையின் இறுதியில் ‘பைவ் ஸ்டார் மறக்காம போட்டுடுங்க பாஸ்’ என சொல்கையில், ஒரு சர்ரியலிச உலகத்துக்குள் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.

இப்பூவுலகில் ஒரு சகமனிதனுக்கான இடத்தை, ஒரு இணையச் செயலியில் நாம் இடும் வரையறுக்கப்பட்ட நட்சத்திர பிம்பங்கள் தீர்மானிக்கிறது என்கிற உண்மை வெளிப்படுத்தும் கொடூரத்தை எப்படி எதிர்கொள்வது?

நான் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில்தான் அந்தப் போக்கை நேரடியாக பார்த்தேன். ‘மாமா, மச்சான்’ எனப் பேசிக் கொள்ளும் என்னுடைய சக ஊழியன், என் நண்பன், எனக்கு அருகேயே அமர்ந்திருப்பவன் ஊதிய உயர்வு சமயத்தில் HR அலுவலரால் அழைக்கப்படுவான். அவனுக்கான ஊதிய உயர்வு விகிதம் அவனிடம் சொல்லி அனுப்பப்படும். கூடவே ‘வேறு யாரிடமும் அத்தகவலைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது’ என்றும் சொல்லப்பட்டிருக்கும்.

கொடுமை என்னவெனில், அவனும் சொல்ல மாட்டான். என்ன கேட்டாலும் சிரித்து மழுப்பிப் பசப்புவானே தவிர, சொல்லிவிடவே மாட்டேன். ஆனால் என்னுடைய எல்லா முக்கியமான பிரச்சினைகளிலும் சந்தேகமே இன்றி எனக்கு ஆதரவாக நிற்பவன். அத்தகையவனையே பிழைப்புக்காக என்னிடம் கூட ரகசியம் காக்கச் சொல்லக் கூடிய அதிகாரம் என்னை அப்போது பொட்டில் அடித்தது.

இன்று ‘நட்சத்திர’ எண்ணிக்கையைக் கேட்கும் மனிதர்கள் வரை அதிர்ச்சி நீளுகிறது.

சக மனிதனிடமிருந்து காக்கப்படும் ரகசியத்தில் வேலையின் உத்தரவாதத்தை வைத்து கார்ப்பரெட் மூலதனம் தன்னை வளர்த்துக் கொள்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலம், ஸ்மார்ட் சிட்டி என கார்ப்பரெட்டுகளுக்கு தேவையான சகலத்தையும் செய்து கொடுக்கப்படுகிறது. சங்கத்துக்கான உரிமை மட்டும் தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஆலைகள் இருந்த காலக்கட்டங்களில் தொழிலாளர் கூடும் இடங்களாக ஆலைகள் இருந்தன. ஒருவருக்கொருவர் பேசி ஒன்று கூடி சங்கம் அமைக்கும் வாய்ப்பும் வளர்க்க முடிந்தது. இன்றோ சங்கமாக தொழிலாளர் சங்கமிப்பதை உடைத்து மீண்டும் அவர்களை உதிரிப் பாட்டாளிகளாகிறது மூலதனம். இன்றுள்ள இன்னொரு உச்சக் கொடுமை அவர்களையும் நம்மையும் ஏவி இணைத்து துண்டாடும் வேலையை மனிதன் கூட அல்ல, தொழில்நுட்பத்தைக் கொண்டு மூலதனம் செய்விக்கிறது.

தொழில்நுட்பத்தையே உருவாக்குபவன் தொழிலாளிதான். தொழில்நுட்பத்தையும் உதவிக்கு எடுத்துக் கொள்வோம். இணையம் வழியே உலகத் தொழிலாளரை ஒன்று கூட்டி நம் பிரச்சினையைச் சொல்வோம். உங்கள் அருகாமையிலேயே ஒரு சிவப்பு சித்தாந்தத் தோழர் இருப்பார். அவரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.

நட்சத்திரங்களில் அல்ல, மனிதனின் இருப்பும் மகத்துவமும் உழைப்பிலும் மனிதத்திலும்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவோம்.

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்.

RAJASANGEETHAN