ஐரா – விமர்சனம்

’ஐரா’ என்றால் என்ன என்று இப்படம் பார்த்தபிறகும் நமக்குத் தெரியவில்லை. பல நண்பர்களை கெஞ்சி கேட்டபிறகு ஓர் இந்திரலோகவாசி சொன்னார்: “ஐரா என்பது இந்திரனின் யானை. தனக்கு அவமானம் நேர்ந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் நினைவில் வைத்திருந்து பழி வாங்குவது அதன் குணம். அதே குணம் இப்படத்தில் வரும் நயன்தாராபேய்க்கும் இருப்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்!”

ஊடகத் துறையில் பணிபுரியும் நயன்தாராவுக்கு யூ-டியூப் சேனல் ஆரம்பித்து பிரபலமாக வேண்டும் என்பது ஆசை. இந்நிலையில் திருமணம் செய்து வைக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர் பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்கிறார்.

பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ’செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார். திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.

மற்றொருபுறம், சென்னையில் கலையரச னைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன? இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு? இதெல்லாம்தான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.

முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப் படம் இது. வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘மா’, ‘லட்சுமி’ குறும்படங்களின் வழியே கவனத்தை ஈர்த்த சர்ஜூன் கே.எம் இயக்கி யுள்ள இப்படத்தில் முழுக்க திகில் விஷயங்கள் நிரம்பியிருந்தாலும் பழி தீர்த்தலுக்கான கார ணங்களை உரிய அழுத்தத்தோடு சொல்லாமல் திரைக்கதை நகர்வதால் படபடப்பைவிட சோர்வே அதிகம் வருகிறது. ஆங்காங்கே வைக்கப்பட்ட காமெடி காட்சிகளும் சோர்வைப் போக்க பெரிதாக துணைபுரியவில்லை.

ஒரு கிராமத்துப் பெண் எவ்வளவு அவமானங் களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கருப்பழகியாக நயன்தாரா நிறைந்திருந்தாலும், பாத்திர அமைப்புக்கு ஏற்ப கதையில் விறுவிறுப்பு, வேகம் இல்லாததால் ஒருகட்டத்துக்கு மேல் படம் சோர்வாக நகர்கிறது. சரியாக பயணிக்காத திரைக்கதை ஓட்டத்தில் அவரது நடிப்பு வீணாகிறது.

அதுவும் போக, ஒரு சில நிமிடங்கள் முன்பாகப் புறப்பட்டிருந்தால் கதையே எப்படி மாறி இருக்கும் என்கிற ‘ரன் லோலா ரன்’ பாணி உத்தியையும் பளிச்சென்று பயன்படுத்தப்படவில்லை.

நயன்தாராவை பேய் ஏன் பழி வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஒரு சில இடங்களில் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும் லிஃப்ட், நேர மாற்றம், குழந்தை யைக் கைப்பிடித்து சாலையை கடப்பது உள்ளிட்ட இடங்களில் லாஜிக் பிரச்சினையும் ஏற்டுகிறது. நயன்தாராவின் பாட்டியாக நடித்துள்ள கொலப்புள்ளி லீலாவை பேய் ஏன் அத்தனை கொடூர கோபத்துடன் அடிக்க வேண்டும் என்பதும் புரியவில்லை.

யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ் ணன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் வந்து செல்பவர்களாக இடம்பெற்றுள்ளனர்.

பொள்ளாச்சி தொடங்கி சென்னை நகரின் இருள் வரைக்கும் ஒளிப்பதிவாளர் சுதர்சன் சீனிவாசன் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார். குறிப்பாக அந்த வான்வழிப் பதிவுகள்! இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.

பிறந்த நேரம் சரியில்லை, கருப்பு நிறம் உள்ளிட்ட சில விஷயங்களை காரணம் காட்டி பெண்களை வதைக்கும் மனிதர்களுக்கு போதனை செய்ய வேண்டும் என்ற நோக் கத்தை இன்னும் தீர்க்கமாக யோசித்துக் கொடுத்திருந்தால் ‘ஐரா’வின் வதம் ரசித்திருக்கும்.