குஜராத் முன்னாள் தலைமை செயலாளர் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வருகிற 6ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பின், தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் அச்சல் குமார் ஜோதியை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருகிற 6 ஆம் தேதி (வியாழக்கிழமை) புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சட்டத்துறை வெளியிட்டுள்ளது.

அச்சல் குமார் ஜோதி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1975ஆம் ஆண்டு பணிக்கு வந்தவர். நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்குக் கீழ் அம்மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றியவர். மோடி பிரதமர் ஆனபிறகு, கடந்த 2015ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் இந்திய தேர்தல் ஆணையம், மோடி மற்றும் பாஜக பக்கம் சாயாமல் பாரபட்சமின்றி செயல்படும் என்று நம்புகிறவர்கள் கை உயர்த்துங்கள்… பார்க்கலாம்…!