ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா வுக்கு விவாகரத்து வழங்கியது குடும்பநல நீதிமன்றம்!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா. இவருக்கும். தொழில் அதிபர்  அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது.

திருமணத்துக்குப்பின் அஸ்வின் –  சௌந்தர்யா தம்பதியர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் துவங்கியது. இதனை சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் சமரச முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில், பிரசவத்திற்காக ரஜினியின் வீட்டுக்கு வந்தார் சௌந்தர்யா. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு வேத் என்று பெயரிட்டார்கள். குழந்தை பிறந்த பிறகும் சௌந்தர்யா புகுந்த வீடு திரும்பாமல் ரஜினியின் வீட்டிலேயே தங்கிவிட்டார். இதனால் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.

இதனையடுத்து கணவர் அஸ்வினை விவாகரத்து செய்யப் போவதாக சௌந்தர்யா பகிரங்கமாக அறிவித்தார். அஸ்வினும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டார். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு கடந்த 26ஆம் தேதி நீதிபதி மேரி கிளட்டா முன் விசாரணைக்கு வந்தபோது, தம்பதியர் இருவரும் ஆஜராகி, “பிரிந்து வாழ்வது என்ற முடிவில் மாற்றம் இல்லை” என தெரிவித்தனர். இதனையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி இன்று உத்தரவிட்டார்.