மாஸ்டர்…! தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு அ.தி.மு.க. சீட் பார்சல்…!

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ் திரையுலகினர் எதற்கெடுத்தாலும் கருணாநிதியை அழைத்து கவுரவித்து விழாக்கள் நடத்துவதையும், தற்போதைய ட்ரெண்டுக்கு ஒவ்வாமல் அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படங்களை உலகப்படங்கள் போல வானளாவ புகழ்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, தன் கைக்கு ஆட்சி அதிகாரம் வந்ததும் திரையுலகினரை தூரமாய் தள்ளி வைத்து போட்டுப் பார்த்து வருகிறார். அவர்களது எந்த கோரிக்கைக்கும் அவர் செவி கொடுப்பதே இல்லை. மட்டுமல்லாது, சிறந்த படங்களுக்கும், சிறந்த கலைஞர்களுக்கும் அரசு சார்பில் விருதுகள் வழங்குவது, சிறிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மானியம் அளிப்பது போன்ற, எந்த ஒரு அரசும் சாதாரணமாக, குறைந்தபட்சமாக செய்யக்கூடிய கடமைகளைக்கூட செய்யாமல் ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.

ஜெயலலிதாவுக்குள் இருக்கும் ‘ஆத்திர சாமி’யை மலையேற்ற, “அம்மனோ சாமியோ… அத்தையோ மாமியோ…” என்று பாடாத குறையாக, தமிழ் திரையுலகினர் பல வழிகளில் வேப்பிலை அடித்துப் பார்த்துவிட்டார்கள். சிங்கள அரசின் ராணுவ அமைச்சக இணையதளத்தில் ஜெயலலிதாவை கேலி செய்யும் கார்ட்டூன் வெளியிடப்பட்டதை ஆட்சேபித்து கண்டனப் போராட்டம் நடத்தியது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்காக கண்ணீர் சிந்தி மவுனப் போராட்டம் நடத்தியது என்றெல்லாம் தினுசு தினுசாக பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி எல்லாம் எடுத்து, “ஜெயலலிதாவுக்கு அரோகரா…” என்று நாக்கில் அலகு குத்தாத குறையாக முழங்கிப் பார்த்துவிட்டார்கள். ஆனால், ஜெயலலிதா எதற்கும் மசிவதாக இல்லை.

உண்மை இப்படி இருக்க, ‘கங்காரு’ பட தயாரிப்பாளரும், தற்போது ‘திருப்பதி லட்டு’ என்ற படத்தை இயக்கி வருபவருமான சுரேஷ் காமாட்சி, ‘நேர்முகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, ஏதோ ஜெயலலிதா காய்தல் – உவத்தல் அகற்றி, பாரபட்சம் இல்லாமல் நேர்மையாக செயல்படுபவர் என்பது போலவும், அவரது அரசு, திரைத்துறை சார்ந்த கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவரை முறையாக அணுகாததே காரணம் என்பது போலவும் பேசியிருக்கிறார். வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறாரோ என்று எண்ணுமளவுக்கு அவர் பேசிய அந்த பேச்சு விவரம் வருமாறு:-

​‘சேதுபதி’ படம் ரிலீசான அன்னைக்கே படம் டோரண்ட்ல வெளியாகிருச்சு. பல கோடிகள் போட்டு நாங்கள் தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தா, அன்னைக்கே இப்படி​ ​ஆன்லைன்ல வரதைப் பத்தி, தயாரிப்பாளர்கள் அடங்​கிய வாட்ஸ்அப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனா யாரும் அதைப் பெரிசா எடுத்துக்கவே இல்லை. ​ஏன்னா, யாரோ வீட்டிலதானே தீ எரியுது, நமக்கென்ன என்றிருந்து விடுகிறார்கள்.. ​

யார்​ ​பண்றாங்கன்னு​ ​கண்டுபிடிக்கிறது ஒண்ணும்​ ​அவ்ளோ பெரிய விசயமில்லை. ஆனா,​ ​கண்டுபிடிக்கிறதை ​யாரும் ​பெரிசா​ ​எடுத்துக்கல. அதான்​ ​வருந்தவேண்டிய விசயமா இருக்கு.

தமிழக அரசின் மானியம் கிடைக்காம 400​ ​தயாரிப்பாளர்கள்​ ​கஷ்டப்படுறாங்க. மானியம்​ ​கொடுத்து 8 வருஷமாச்சு.​ ​ரெண்டு ஆட்சி மாறியாச்சு.​ ​தயாரிப்பாளர்கள் சங்கத்துல​ ​மூணு தடவை நிர்வாகிகள்​ ​மாறியாச்சு. ஆனா, இந்த​ ​மானியம் விஷயத்துல​ ​இதுவரை ஒண்ணும் பெரிசா​ ​நடக்கலை. இவங்க​ ​நேரடியாக தமிழக முதல்வர்கிட்ட கேட்​கல.​ ​

இந்திய சினிமா 100வது ஆண்டு விழா​ ​கொண்டாடுனப்போ, 10கோடி கொடுத்தாங்க தமிழக முதல்வர். ஏன்னா, அவங்க​ ​ஒரு நிரந்தர சினிமா​ ​கலைஞர். நிரந்தர சினிமா​ ​உறுப்பினர். சினிமா மேல​ ​அவங்களுக்கு அன்பு​ ​இருக்கு. அப்படி​ப்பட்டவங்க​ ​இதை நிறுத்தி​ ​வைக்க மாட்டாங்க. அவங்க​ ​பார்வைக்கு விசயத்தை​ ​தயாரிப்பாளர்கள் சங்க​ ​நிர்வாகிகள் கொண்டு போனாங்களா? அதுக்கு​ ​முயற்சி எடுத்தாங்களா?ன்னுதெரியல.

அதேமாதிரி 3 வருசமா, தமிழ்நாடு அரசு விருதுகள் ​வழங்கும் விழா நடக்கல.​ ​அதையும் யாரும் கேட்ட மாதிரி தெரியல.

தேர்தல் நேரத்துல நாடகம்​ ​போடக் கூடாதுன்னு​ ​சொன்னா​ ​நாடகக் கலைஞர்கள்​ ​பாதிக்கப்படுவாங்கன்னு​ ​நடிகர் சங்க நிர்வாகிகள்​ ​தேர்தல் கமிஷனரை நேரா​ ​பார்த்து பேசுறாங்க. மனு​ ​கொடுக்கிறாங்க. ஆனா, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், சங்க​ ​உறுப்பினர்களுக்காக அப்படி​ ​செயல்பட்ட மாதிரி தெரியல.​

ஒரு படத்துக்கு மானியம் கேட்டு அப்ளிகேசன் கொடுக்கிறப்போ, அதற்கு கட்டணமாக ஒவ்வொரு படத்துக்கும் அந்த படம் சார்பாக 1000 ரூபாய், தயாரிப்பாளர்கள் சங்கம்​ ​மூலமாக அரசுக்கு கடந்த ​ எட்டு வருசமா​ ​போயிட்டிருக்கு. அதனால​ ​மானியம் கேட்டு​ ​விண்ணப்பிக்கிறது​ ​அந்தத்​ து​றை சம்பந்தமான​ ​அரசு அதிகாரிகளுக்​கு நல்​லாவே தெரியும்.

எல்லாப்​ ​படத்தையும்​ ​பார்த்தாச்சுன்னும்​ ​சொல்றாங்க. ஆனா, ஏன்​ ​எட்டு வருசமா நிறுத்தி​ ​வச்சிருக்காங்க​ ​அப்டிங்கிறதுக்கு எந்த விபரமும் தெரியல.​ எனக்குத் தெரிந்து நாம் அரசை சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இனியாவது, ​ நடிகர்கள் சங்கம் முதலமைச்சரை அணுகுவதைப் போல் தயாரிப்பாளர்கள் சங்கமும் அணுக வேண்டும்.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.

ஜெயலலிதாவுக்குள் இருக்கும் தனிமனித வெறுப்பையும், செயல்படா தன்மையையும் இத்தனை அழகாக பூசி மெழுகி, சப்பைக்கட்டு கட்ட ஓ.பன்னீர்செல்வத்தால்கூட முடியாது…!

மாஸ்டர்…! தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு அ.தி.மு.க. சீட் பார்சல்…!