“என் தேசிய விருதை கே.பாலசந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்!” – சமுத்திரக்கனி

63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டது. வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

இது குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், “இறைவனுக்கும் நண்பன் வெற்றிமாறனுக்கும் நன்றி. என் குருநாதர் கே.பாலசந்தர் அய்யா, ‘உனக்கு தேசிய அளவில் அங்கீகாரம் வரும்’ என்று அடிக்கடி சொல்வார். அவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். இந்த விருதை என் குருநாதருக்கு சமர்ப்பிக்கிறேன்.

எடிட்டர் கிஷோருக்கு விருது கிடைத்தது தான் மிகவும் மகிழ்ச்சி. கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைவருமே கடினமாக உழைத்தார்கள். நடிகர் தினேஷ், கிஷோர் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே கஷ்டப்பட்டு நடித்திருந்தார்கள். இப்படத்துக்காக உண்மையாக உறுதியாக உழைத்த எல்லாருக்குமே விருது கிடைத்திருக்க வேண்டும். ரொம்ப இஷ்டப்பட்டு கடினமான பாதைகளை கடந்து வந்தோம். இந்த விருதில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது” என்றார்.

சமுத்திரக்கனி செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கூறியிருப்பது:

“எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்றுவரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

63வது தேசிய விருது பட்டியலில் எனக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருது, நடிகர் தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்திற்காக கிடைத்துள்ளது.

எனக்கு இவ்விருது கிடைக்க உருதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும், ‘விசாரணை’ படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

‘விசாரணை’ படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோருக்கு ‘விசாரணை’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கபெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ‘விசாரணை’ படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள். மேலும் தேசிய விருது வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகள்.

எனது அடுத்த படைப்பான “அப்பா” விரைவில் வெளிவரவுள்ளது. உங்கள் மேலான ஆதரவை எனக்கும், சிறந்த தமிழ் படைப்புகளுக்கும் தொடர்ந்து அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.”