ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவித போராட்டம்: சிம்பு அறிவிப்பு!

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை (12ஆம் தேதி) மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துங்கள். அனைவரும் வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுனமாக கையை கட்டி நில்லுங்கள். நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துகிறேன். 10 நிமிடங்களுக்கு நான் மவுன விரதம் இருக்கப் போகிறேன்” என்று சிம்பு கூறினார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்துவரும் நிலையில், நடிகர் சில்ம்பரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆவேசமாக கூறியதாவது:

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே வந்தது தமிழ். தமிழுக்கு என்று ஒரு சிறப்பு உள்ளது. மகத்தான தாய்மொழியில் பிறந்தது எனக்கு பெருமை. தமிழ் பேசி நடித்ததால்தான் இந்த வீடு, இத்தனை மைக், மீடியா எனக்கு கிடைத்துள்ளது. தமிழ் இல்லாவிட்டால் இந்த இடமே எனக்கு இல்லை.

நான் அரசியல்வாதி கிடையாது. நான் ஒரு நடிகர்தான். ஆனாலும் சக தமிழனாக நடைபெறும் நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தமிழர்களுக்கு இலங்கை பிரச்சினை உட்பட ஏகப்பட்ட பிரச்சினை உள்ளது.

தமிழர்களுக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சினை மேல் பிரச்சினை வருகிறது என்று நான் யோசித்துள்ளேன். இலங்கையில் நான் துப்பாக்கி பிடித்து போராட முடியாது. இங்கு போராடினால் அரசியலுக்கு வருகிறார் என கட்டம் கட்டி விட்டுவிடுவார்கள்.

தனி மனிதன் எப்படி போராடலாம்? சாலை மறியல் செய்யலாம், உண்ணா விரதம் இருக்கலாம். ஆனால் ஒரு பலனும் இல்லை.

சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தில் காளை மாட்டுடன் நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. ஒரு மாதம் காளை மாட்டுடன் நான் பழகினேன். சாப்பாடு கொடுத்தேன். அதன்பிறகுதான் நான் பக்கத்திலேயே போக முடிந்தது. நான் சும்மா வந்து பேசுபவன் இல்லை. காளை மாட்டின் அருமையை நான் உணர்ந்தவன்.

இன்று மட்டும் ஜல்லிக்கட்டுக்காக ஏன் சிம்பு குரல் கொடுக்கிறார் என கேட்கலாம். நான் முன்பு வயதால் சிறியவன். இப்போது எனக்கு முதிர்ச்சி வந்துள்ளது. எனக்கு தகுதியை மக்கள் மரியாதை கொடுத்துள்ளனர். 3 வருடம் படம் வெளிவராவிட்டாலும், பண மதிப்பிழப்புக்கு பிறகும் எனது படத்தை தமிழர்கள் வெற்றி பெற வைத்தனர். இப்படி ஒரு அன்பு வைத்த மக்களுக்காக நான் முன்வந்துள்ளேன் இப்போது எனக்கு பேச தகுதியுள்ளதோ இல்லையோ, ஆனால், அருகதையுள்ளது.

அடுத்தவன்தான் தமிழனை அடிக்கிறான் என்றால், சுனாமி அடிக்கிறது, வெள்ளம் அடிக்கிறது அதையும் பரவாயில்லை என பொறுத்துக்கொள்கிறோம். இப்படி எல்லாவற்றையும் பொறுப்பதே தமிழர்கள் குணமாகிவிட்டது.

இவ்வளவு நாள் வெளியே அடித்தார்கள் பரவாயில்லை என இருந்தோம். இப்போது வீட்டுக்குள் வந்து அடிக்கிறார்களே. இன்றும் பரவாயில்லை என்று நீங்கள் சும்மா இருக்க போகிறீர்களா?

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுகிறார்கள். கன்னியாகுமரி மீனவரை சுட்டு கொன்றால் தமிழ் மீனவர்கள் கொலை என்று செய்தி போடுகிறார்கள். மீடியாக்கள் உங்கள் மனசாட்சியையே கேட்டுப் பாருங்கள்.

தமிழகம் என்ன தனி நாடா? எங்களை ஏன் பிரிக்கிறீர்கள். கர்நாடகாவில் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லி தமிழர்களை அடிக்கிறார்கள். அவர்கள் அடிக்கத்தான் செய்வார்கள். அவர்களது உரிமைக்காக அவர்கள் உணர்வோடு அடிக்கிறார்கள். தமிழர்களுக்குத்தான் உணர்வே கிடையாதே.

தமிழர்களை அநாதைகள் என்று நினைத்துவிட்டீர்களா? ஆமாய்யா.. தமிழர்கள் அநாதைகள்தான். அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்றும், மத, ஜாதி ரீதியாகவும் தமிழர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர். எனவே, தமிழர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளோம்.

தமிழர்கள் அநாதைகள் இல்லை என்று நிரூபிக்க நாளை (12ஆம் தேதி) மாலை 5 மணிக்கு அவரவர் வீட்டு வாசலில் போராட்டம் நடத்துங்கள். அனைவரும் வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுனமாக கையை கட்டி நில்லுங்கள்.

நாளை மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துகிறேன். 10 நிமிடங்களுக்கு நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன் .

இப்போராட்டத்திற்கு ஆதரவு தராவிட்டால் நான் அமெரிக்காவுக்கு போய்விடுவேன். என்னிடம் விசா உள்ளது. ஆனால் பிற தமிழர்கள் உங்கள் உரிமையை இழந்துவிட்டு எங்கே செல்வீர்கள் என யோசித்துக்கொள்ளுங்கள்.

மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு மாட்டை கொடுமைப்படுத்துவதாக கூற என்ன தகுதியுள்ளது?

இவ்வாறு சிம்பு கூறினார்.

Read previous post:
0a1e
“ஜல்லிக்கட்டு தடையை ஜீரணிக்க முடியவில்லை!” – நடிகர் அசோக் செல்வன்

“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை

Close