“ஜல்லிக்கட்டு தடையை ஜீரணிக்க முடியவில்லை!” – நடிகர் அசோக் செல்வன்

“பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே, அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை” என்று நடிகர் அசோக் செல்வன் கூறியுள்ளார்.

இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே ஆக வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசன், சூர்யா இருவருமே தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில், ‘சூது கவ்வும்’, ‘பீட்ஸா 2’, ‘தெகிடி’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சவாலே சமாளி’, ‘144’ போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் அசோக் செல்வன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அ ந்த கடிதம்:-

தமிழ் என்ற உணர்வு என் தயக்கத்தை உடைத்ததால் இந்தப் பதிவு. என் வயது குறைவாக இருக்கலாம். நான் சாதாரண ஆளாக இருக்கலாம். என் கருத்துகள் உண்மையானவை. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்வது?

பரம்பரை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதில் பெருமைப்படுபவன் நான். இளம்பருவத்தில் காலையில் கண்விழித்ததும் பார்ப்பது கம்பீரமான காங்கேயம் காளைகளைத்தான்! நாட்டுப்பசுக்களும் காளைகளும் எருதுகளும் குடும்பத்தில் ஒருவராய் கொண்டாடப்பட்டதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

பாரம்பரிய காளைகளுக்கு செய்யப்படும் மரியாதையே ஜல்லிக்கட்டு. குலதெய்வம் போல காளைகளை கொண்டாடி மகிழும் இடத்தில் அதைக் கொடுமைப்படுத்துவதாக ஒப்பாரி வைக்கிறது PETA. அதையும் நம்பி நீதிமன்றங்கள் தடை விதிக்கின்றவே அதைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

நமது பாரம்பரியம், கலாச்சாரம் மேல் நமது அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை இருக்க வேண்டாமா?

மிருகத்தோலை பதனிட்டு ஏற்றுமதி செய்வதை தடை செய்யப் போகிறார்களா? காலணி, பர்ஸ், கைப்பை தடை செய்யப்படுமா?

நேற்று கிரிக்கெட் விளையாட்டில் மாணவர் மரணம். இனி கிரிக்கெட் தடை செய்யப்படுமா?

குத்துச் சண்டையில் ஒரு மாணவி மரணம். குத்துச் சண்டை தடை செய்யப்படுமா?

தினசரி விபத்துகள் பலர் மரணம். எதை நம்மால் தடுக்க முடியும்?

ஜல்லிக்கட்டில் தான் ஆபத்தா? பின் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வது ஏன்?

நண்பர்களே! காளைகளை தனது குழந்தைகளைப் போல் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். நாட்டுப்பால் கொடுத்து நமது எதிர்கால சந்ததியினரை ஆரோக்கியமாக வளர்ப்போம்.

பாரம்பரியம் நமது பெருமை! அதைக் காப்பது நமது கடமை! ஒன்று சேர்வோம்! உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.