முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் – விமர்சனம்

நடிப்பு: வினித் சீனிவாசன், அர்ஷா பைஜூ, சுரஜ் வெஞ்சரமூடு, தான்வி ராம் மற்றும் பலர்

இயக்கம்: அபிநவ் சுந்தர்நாயக்

இசை: சிபி மேத்யூ அலெக்ஸ்

ஒளிப்பதிவு: விசுவஜித் ஒடுக்கத்தில்

தயாரிப்பு: ஜாய் மூவி புரொடக்சன்ஸ் & ஜெயண்ட் பிலிம்ஸ்

பத்திரிகை தொடர்பு: பரணி & திரு

அறத்துடன், இப்படித்தான் நேர்மையாக உழைத்துப் பொருளீட்ட வேண்டும் என்று வாழ்பவர்கள் பலர். அறமற்று, எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம் என்று தவறான வழிகளைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக முன்னேறி வாழ்பவர்கள் சிலர். அந்த ‘சிலரில்’ ஒருவரே இந்த மலையாளப்பட கதைநாயகன்.

இளம் வழக்கறிஞர் நாயகன் முகுந்தன் உன்னி (வினித் சீனிவாசன்). தனது ஆதார் அட்டையில் வருடா வருடம் தன் வயதைக் குறைத்துக்கொண்டே வரும் கிரிமினல் அவர். தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். போதிய வருமானம் இல்லாமல், வாழ்க்கையை ஓட்ட சிரமப்படுகிறார். அவரது வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவதுதான். ஏன்? ஏனென்றால் அவர் அதற்கு தகுதியானவர் என்று நம்புகிறார். அந்த இலட்சியத்தை அடைய, அவர் எந்த பாதையிலும் செல்ல தயாராக இருக்கிறார்.

இந்நிலையில் அவரது அம்மா தற்செயலாக வீட்டில் விழுந்து காலை முறித்துக்கொள்கிறார். அவருடைய சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் முகுந்தன் உன்னிக்கு, இப்படிப்பட்ட பல விபத்துகளை சாலை விபத்துகளாக பொய்யாய் மாற்றி, இன்சூரன்ஸ் பணம் பெற்றுத்தரும் வழக்கறிஞரின் ஏஜெண்ட் ஒருவரது நட்பு கிடைக்கிறது. அதை வைத்து இன்சூரன்ஸ் பணம் பெற்று அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கு செலவழிக்கிறார்.

இதில் ருசி கண்ட பூனையாகிவிட்ட முகுந்தன் உன்னி, அதன்பின் அதே வழியைத் தானும் கடைப்பிடித்து சம்பாதிக்கத் தொடங்குகிறார். ஏற்கெனவே அந்த வழியில் சம்பாதித்து புகழ்பெற்று விளங்கும் வழக்கறிஞர் சுராஜ் வெஞ்சரமூடுவுக்கு போட்டியாக களம் இறங்கி, ஒரு கட்டத்தில் அவரையே முந்துகிறார்.  இவரது வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சுராஜ், தன்னுடைய கிரிமினல் மூளையைப் பயன்படுத்தி இவருக்கு கேஸ்கள் கிடைக்காமல் செய்ய, ஒரு கட்டத்தில் சுராஜையே தீர்த்துக் கட்டி தனக்கு போட்டி இல்லாமல் செய்யும் முகுந்தன் உன்னி இறுதியில் என்ன ஆகிறார் என்பது படத்தின் மீதிக்கதை.

0a1c

படத்தின் நாயகன் முகுந்தன் உன்னியாக வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்திருக்கும் வினித் சீனிவாசன், அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். மற்றவர்களிடம் பேசுவதைவிட தனக்குத்தானே அவர் பேசிக்கொள்ளும் காட்சிகளில் அவருடைய நடிப்புத்திறன் வெளிப்படுகிறது. வினித்தை பார்க்கும்போது அவரது தந்தையும் பிரபல நடிகருமான சீனிவாசன் நினைவுக்கு வந்துபோவது தவிர்க்க முடியாதது.

இன்னொரு வழக்கறிஞராக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு பாத்திரத்துக்கும் வினித் சீனிவாசன் பாத்திரத்துக்கும் வேறுபாடே இல்லை. அவரும் அதற்கேற்ப நடித்திருக்கிறார். இறந்தபின்னும் வினீத்தின் நினைவுகளில் அவர் வரும் காட்சிகள் நன்று.

வினித் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அர்ஷா பைஜூ நன்றாக நடித்து தவறை இரசிக்க வைக்கிறார். வினித்தின் தோழியாக வரும் தான்வி ராம் நல்லவர்களின் பிரதிநிதியாக வந்து ஆறுதல் தருகிறார்.

வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வகிக்கின்றன. அதற்கு ஆங்கிலப்படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு வெளியான ‘நைட் கிராலர்‘ என்ற ஆங்கிலப்படத்தை அடியொற்றி எடுக்கப்பட்ட படமாக இந்த ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’  தெரிந்தாலும் அந்த கதையை இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு மொத்தமாக மாற்றி சுவாரசியத்தைக் கூட்டி சொல்லி இருப்பதால் இந்த படம் தனிக்கவனம் பெறுகிறது.

இயக்குநர் அபிநவ் சுந்தர்நாயக், விமல் கோபாலகிருஷ்ணன் என்பவருடன் இணைந்து நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இயக்கமும் அருமை.

முற்றிலும் தவறான கதை என்றாலும் முழுக்க நகைச்சுவை கலந்து அந்தத் தவறை வலுவிழக்கச் செய்திருக்கும் திரைக்கதையும் நன்றாக நடித்துள்ள் நடிகர்களும் படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் விசுவஜித் ஒடுக்கத்தில், படம் இயல்பாக நகர உறுதுணையாக இருக்கிறார். சிபி மேத்யூ அலெக்சின் இசை காட்சிகளுடன் இணைந்து பயணிக்கிறது.

’முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ – கலாச்சார அதிர்ச்சியூட்டும் டார்க் காமெடி படம்! பார்க்கலாம்!!