பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

விஜய் நடித்த ‘சுறா’ படம் பற்றி பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பல வருடங்களுக்கு முன் விமர்சித்திருந்தார். அதற்காக அவரை விஜய் ரசிகர்கள் இப்போது ட்விட்டரில் தரம் தாழ்ந்து ஆபாசமாக விமர்சித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இது குறித்து தன்யா ராஜேந்திரன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தன்யா ராஜேந்திரன் மீது ஆபாசமாக சமூக வலைதளத் தாக்குதல் நடத்தும் விஜய் ரசிகர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத் தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இது போன்ற அச்சுறுத்தல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.