மனிதன் மனிதத்தை அடைய வேண்டும்; அல்லது அழிய வேண்டும்!

ஒரு சின்ன விவாதம் நேற்று நண்பர்களுடன் மனிதம் பற்றி. பரவலாக காணப்படும் விவாதம்தான். மனிதம் என கொண்டாடுகிறோம். விரும்புகிறோம். எல்லாம் சரி. ஆனால் மனிதம் என ஒன்று இருக்கிறதா? நாம் விரும்புகிறோம் என்பதால் மட்டுமே ஒரு விஷயம் இருப்பதாக ஆகி விடுமா? எனக்கு கூடத் தான் நிர்ச்சலனம் பிடிக்கும். இருக்கிறதா என்ன?

மனிதம் என்பது இலக்கு. உண்மையில் மனிதம் இல்லை என்பதில் இருந்து தான் மனிதம் அடைவதற்கான பயணத்தை தொடங்க முடியும். அது மட்டும் தான் சரியான வழியாக இருக்க முடியும். மனிதம் இருப்பதாக நினைத்துக்கொண்டால் அதற்கான பயணத்தைக் கூட தொடங்க முடியாது. அதுவும் இப்போது உலகமும், நாடும் இருக்கும் நிலையில், நிச்சயமாக முடியாது.

மனிதம் என்ன என்பதை வரையறுங்கள். வரையறைக்கெல்லாம் உட்படாதது மனிதம் என ஜல்லியடித்து மதம், கடவுள் போல் மற்றுமொரு பூடகமாக ஆக்காமல், தெளிவாக வரையறுங்கள். ஏற்கனவே இந்த நாட்டில் புனிதங்கள் அதிகம். மனிதத்தையும் அந்த பட்டியலில் சேர்த்துவிட வேண்டாம்.

சென்னை வெள்ளம் வந்தபோது மனிதம்தானே உதவியது என கேட்கலாம். நிச்சயமாக. ஆனால் அதற்குப் பின் ஒரு கோட்பாடு இருக்கும். ஒரு திட்டம் இருக்கும். தப்பு என்றே சொல்லவில்லை. ஆர்எஸ்எஸ்ஸிலிருந்து திராவிடம் பேசுபவர் வரை, NGOக்கள் என எல்லாரும் தான் உதவினோம். அப்படி நாம் உதவியதற்கு ஏதோ ஒரு கோட்பாடு, சரியோ தவறோ தேவைப்படுகிறது.

உயிரியல் ரீதியாக நாம் இன்னும் விலங்குகள்தான். உயிரியல் ரீதியான பரிணாமமும் நமக்கு இனி இருக்காது. சமூகரீதியான பரிணாமம்தான் இனி சாத்தியம். அதாவது, மூளையில் நடக்கும் மாற்றங்கள். விலங்குலக மூளை படிமங்களை இழத்தல்தான் அடுத்த பரிணாம கட்டங்களாக இருக்க முடியும். அதற்கு நாம் மிக வேகமாக மனிதம் பழக வேண்டும்.

மனிதத்தை உருவாக்குவதற்கான புறக்காரணிகள் ஏற்கனவே உருவாகி வளர்ந்து உச்சத்தை அடைந்து நிற்கிறது. இன்னும் நாம் மனிதத்தை அடையவில்லை எனில் புறக்காரணிகள் மனிதனை அழித்துவிடும். ஆகவே, ஒன்று மனிதன் மனிதத்தை அடைய வேண்டும். அல்லது அழிய வேண்டும்.

மனிதம் பேசும், போற்றும் என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். உலகம், நாடு, மாநிலம், ஊர், தெரு, வீடு என என் எல்லைகளை குறுக்கிக்கொண்டே வந்தால் என்னையும் என்னை சார்ந்தவற்றையும் காப்பாற்றிக் கொள்ளவே கடைசியில் எஞ்சி நிற்பேன். என் சுயநலம் அது. அதிலிருந்து தொடங்கிதான் நாம் சமூகம் ஆகி இருக்கிறோம். சமூகம் என்பதே கூட்டு சுயநலம்தான். இந்த கூட்டு சுயநலத்தில் இருந்து நகர்ந்து கூட்டு பொதுநலத்துக்கு அல்லது மனிதத்துக்கு சேர வேண்டும். சேர்ப்பிக்கப்படுவோம். அதற்கான எல்லா வேலைகளும் நாம் எடுக்கிறோமோ இல்லையோ, மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மண்டையாகப் பேசாமல் கொஞ்சம் புரியும்படி பேசுவோம். Terminator Salvation பார்த்தீர்களா? இறுதிக்காலத்தில் மனிதர்கள் அப்படி ஒடுக்கப்படுவார்கள். இறுதிக்காலம் ரொம்ப தூரம் இருப்பதாக நினைக்க வேண்டாம். இன்னும் சில பத்து வருடங்கள்தான். பூமி ஏழைகளின் சேரியாக மாற்றப்படும். நீங்கள் வாழ்வதற்கே நான் அவசியமாக இருக்கும் சூழல் உருவாகும். அங்கு உங்களை விட நான் முக்கியம் ஆவேன். என்னைவிட எனக்கு நீங்கள் முக்கியம் ஆவீர்கள். உங்கள் உணவுக்காக நான் போராடுவேன். என் உணவுக்காக நீங்கள் போராடுவீர்கள். அங்கு மனிதம் தழைத்திருக்கும்.

அதுவரை இங்கு மனிதம் இல்லைதான். சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு உதவ துணிமணி அனுப்பியவர்கள்தான் ஆணவக்கொலைகளும் செய்கிறார்கள், இல்லையா? மிகவும் எளிய விஷயம். அரசுகளில் மனிதம் இல்லாத வரை சமூகத்தில் இருக்கப் போவதில்லை. அரசுகளும், அதிகாரமும் மனிதத்துக்கு எதிரானவைதான். அப்படியான அரசை, அதிகாரத்தை கைப்பற்ற விரும்பும், தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவனும் மனிதமற்றவனாகத்தான் இருப்பான்.

அரசும் அதிகாரமும் லாபவெறியும் மனிதத்தை இருக்க விடாது. மனிதனையே இருக்க விடாது. அதை மனிதன் உணருகையில்தான் மனிதம் போற்றும் சமூகத்துக்கான அடியெடுத்து வைப்பான். அந்த சமூகத்தில் மட்டும்தான் சாதி, மதம், அகம்பாவம், individualism, அரசு என எல்லாவற்றையும் தாண்டி சகமனிதன் மட்டுமே முக்கியம் என்ற நிலை இருக்கும்.

அந்த சமூகத்துக்கு அரசு இருக்காது. குழு வாழ்க்கை முறைதான் இருக்கும். Survival of the fittest என்ற கோஷம், இல்லாமல் ஆக்கப்பட்டு, survival of all என்ற கோஷம் நிலைபெற்றிருக்கும். மனிதகுல அழிவை அந்த சமூக வாழ்க்கை முறை மட்டுமே நிறுத்தி வைக்கும். அதற்கு எதிராக இருக்கும் எல்லா உதிரிவாழ் மனிதர்களையும் இயற்கை அழித்திருக்கும். அந்த வாழ்க்கை முறை பேசும் தத்துவம் ஒன்று இன்றுமே இருக்கிறது. நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் நம்மை அழிப்பவர்கள் அந்த தத்துவத்தை நாம் அறிந்துகொள்ள வைப்பார்கள்.

2012 படத்தில் ஒரு வசனம் உண்டு. நாயகன் ஒரு எழுத்தாளன். அவன் கதைகளைப் படித்த அறிவியலாளன் ஒருவன், அவனிடம் இப்படி கேட்பான், “Do you believe that people would behave so selflessly knowing that their own lives were at stake?” உங்களை நான் கேட்பதும் இதே கேள்வியைத்தான்.

‘ஆம்’ என்பது உங்கள் பதிலாக இருந்தால், வாருங்கள். மனிதம் இன்று இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்த பரிணாமத்துக்கு நடை போடுவோம்.

RAJASANGEETHAN JOHN