“என் மதம் இந்து மதம் அல்ல; திராவிட மதம்” என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

“எம்.ஜி.ஆருக்கு திராவிடக் கொள்கையின் மீது எந்தப் பற்றும் இருந்ததில்லை, திமுக அவரைத் தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டது, கருணாநிதியைப் போல இந்துமதக் கடவுள்களை அவர் சீண்டியதில்லை, மத நம்பிக்கைகளை சீண்டுவதைப் போன்ற வசனங்கள் பேசுவதை அவர் தவிர்த்தார், இடத்துக்கேற்றபடி இந்துவாகவும் அவதாரம் எடுத்தார், தனது கொள்கை ‘திராவிடம்’ என்று சொன்னதில்லை, ‘அண்ணாயிஸம்’ என்று புதிதாக ஒன்றைச் சொன்னார்.” இவ்வகையான விமர்சனங்கள், ஆய்வுப்பூர்வமான விமர்சனங்களாக நமக்குத் தெரியவில்லை.

என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது, என்.எஸ்.கே மூலமாக பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழ்களைப் படித்ததாகவும், அது தன் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் எம்.ஜி.ஆர் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு சமயம், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விழா ஒன்றில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியதுண்டு. அந்த பேச்சு:-

“மருத்துவத்தால் குணமாகாத நோய்களை அய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப்பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

“கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள்.

“இப்படிச் கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடைவார்கள்.

“டாக்டர்களின் திறமைக்கு உத்தரவாதம் வேண்டும்; அவர்களின் திறமையைக் கேவலப்படுத்தும் வகையில் ‘திருநீறு குணமாக்கிவிடும்’ என்று செல்லுபவர்களை என்ன சொல்லுவது?’’

பிறகொரு சந்தர்ப்பத்தில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் தன்னுடைய மதம் என்கிற இடத்தில், இந்து மதம் அல்ல, திராவிட மதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னுடைய கடைசிகாலம் வரை, தீபாவளி உள்ளிட்ட எந்த இந்துமதப் பண்டிகைகளுக்கும் அவர் வாழ்த்துச் சொன்னவரில்லை. தன்னுடைய அலுவலகத்திலும் வீடுகளிலும் பொங்கல் விழாக்களை மட்டும்தான் அவர் கொண்டாடியிருக்கிறார்…

…பெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் மிகச் சிறப்பாக அரசின் சார்பில் ஓர் ஆண்டு முழுக்கக் கொண்டாடினார். பெரியார் முன்மொழிந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஈரோட்டிற்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடர் என்ற நினைவுச்சின்னத்தை அமைத்தார். பெரியார் பொன்மொழிகள் என்ற நூலுக்கு இருந்த தடையை நீக்கினார்.

(முழு கட்டுரை படிக்க)